”டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது; பாஜக அரசின் திட்டம் இதுதான்” - அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!

”டெல்லி அரசை கவிழ்க்க சதி நடைபெறுகிறது” என டெல்லி கல்வித் துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிஷி
அதிஷிட்விட்டர்

இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், ”டெல்லி அரசை கவிழ்க்க சதி நடைபெறுகிறது; ஆம் ஆத்மி அரசை கவிழ்த்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர நினைக்கிறார்கள்” என டெல்லி கல்வித் துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “அரவிந்த் கெஜ்ரிவால் போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடக்கிறது. எனவேதான் எந்த ஆதாரமும் இல்லாமல் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்ற சில விஷயங்களைப் பார்க்கும்போது, ​​​​சதி நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

டெல்லியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் காலியாக இருந்தும் பல மாதங்களாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. டெல்லிக்குள் அதிகாரிகள் இடமாற்றமும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகள் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டனர். கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அவர்களின் சதியின் ஒரு பகுதியே” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பாஜக எம்பியின் முத்த சர்ச்சை.. பாதிக்கப்பட்ட மாணவி பதில்!

அதிஷி
“பாஜகவின் துணை அமைப்பா தேர்தல் ஆணையம்?” - கேள்வி எழுப்பிய டெல்லி அமைச்சர் அதிஷி

அதேநேரத்தில், அதிஷியின் இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா, “ஆம் ஆத்மி தினம்தினம் புதிய கதைகளைச் சொல்லி வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் செப்டம்பர் முதல் கவர்னரை முதல்வர் சந்திக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியுமா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”பாஜகவில் சேராவிட்டால் நீங்கள் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என எனக்கு மிரட்டல் வந்தது” எனவும், ”தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா” எனவும் பாஜகவுக்கு எதிராக அமைச்சர் அதிஷி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

அதிஷி
“தேர்தலுக்கு முன்பாக மேலும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படலாம்” - டெல்லி அமைச்சர் அதிஷி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com