8 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்வு.. கட்டண அறிவிப்பை வெளியிட்ட டெல்லி மெட்ரோ!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) கட்டண உயர்வை அறிவித்துள்ள நிலையில், அது இன்று முதல் (ஆக. 26) அமலுக்கு வந்துள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மெட்ரோவில் கட்டண உயர்வு
மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் பல நகரங்களில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனால் 2002 முதல் இயக்கப்பட்டு வருகிறது. டெல்லி மெட்ரோ இந்தியாவின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய மெட்ரோ ரயில் அமைப்பாகும். இது, டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான காஜியாபாத், ஃபரிதாபாத், குர்கான், நொய்டா, பகதூர்கர், பல்லப்கர் உள்ளிட்ட பிற இடங்களுக்குள்ளும் தடையற்ற, முழுமையான இணைப்பை வழங்குகிறது. குறிப்பாக, டெல்லி மெட்ரோ 9 வழித்தடங்களிலும் ஒரு விமான நிலைய விரைவுப் பாதையிலும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) கட்டண உயர்வை அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் (ஆக. 26) அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புதிய கட்டணம் எவ்வளவு?
புதிய விதிகளின்கீழ், கட்டணம் 1 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் இந்த அதிகரிப்பு அதிகபட்சமாக 5 ரூபாய் வரை இருக்கும். கட்டண மாற்றத்திற்குப் பிறகு, டெல்லி மெட்ரோவின் குறைந்தபட்ச கட்டணம் இப்போது ரூ.11 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.64 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில், கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன, 32 கிலோமீட்டருக்கு மேல் உள்ள பயணங்களுக்கு முந்தைய ரூ.50 உடன் ஒப்பிடும்போது ரூ.54 ஆக உள்ளது.
அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட இந்த விலை உயர்வு அவசியம் என்று குறிப்பிட்ட DMRC அதிகாரிகள், இது மிகவும் குறைவானதே என்று தெரிவித்துள்ளனர். புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்ததன்மூலம், 12 முதல் 21 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பயணி ஒருவர், இப்போது ரூ.40க்கு பதிலாக ரூ.43 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 21–32 கி.மீ. ஸ்லாப் கட்டணம் ரூ.50 இல் இருந்து ரூ.54 ஆக உயர்ந்துள்ளது.