டெல்லி | கணவரின் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்திய பெண் தாதா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!
டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஹாஷிம் பாபா. இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவருடைய மூன்றாவது மனைவி, சோயாகான் (கணவரை விவாகரத்து செய்த சோயாகான், 2017இல் பாபாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்). கணவர் ஹாஷிம் பாபா சிறைக்குச் சென்றதால் அவர் செய்து வந்த சட்ட விரோத செயல்களில் சோயாகான் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், போலீஸ்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவியே இத்தகைய செயல்களைச் செய்துவந்துள்ளார்.
அதாவது, இவர், நேரடியாக எதையும் செய்யாமல் திரைமறைவில் கணவரின் ஆட்களை இயக்கி வந்துள்ளார். இதற்காக, சிறையில் இருக்கும் தன் கணவரிடம் சென்று அவ்வப்போது ஆலோசனைகளைப் பெற்று வந்துள்ளார். அங்குதான், தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக பாபா தனது மனைவிக்கு சொன்னதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, கணவரின் கூட்டாளிகளை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுத்தி ஒரு பெண் தாதாவாக சோயாகான் செயல்பட்டு வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு கோடிக்கணக்கான பணமும் கிடைக்கத் தொடங்கியதை அடுத்து, அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ தொடங்கினார். விலை உயந்த ஆடை அணிந்து ஆடம்பர காரில் பாதுகாவலர்களுடன் வலம் வந்துள்ளார்.
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னை பெரிய பெண் தொழில் அதிபர்போல வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சோயாகான் 270 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். சோயாகானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தற்போது அவரைக் கைதுசெய்துள்ளா போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாதிர் ஷா கொலை வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் சோயாகான தங்குமிடம் அளித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசாரின் விசாரணையில், சோயாகான் குடும்பமே குற்றப் பின்னணி கொண்டதாக உள்ளது. பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, சோயாகானின் தாயார் 2024ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரது தந்தை போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையவர் எனத் தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு டெல்லி பகுதி நீண்டகாலமாக சேனு கும்பல், ஹாஷிம் பாபா கும்பல் மற்றும் நசீர் பெஹல்வான் கும்பல் உள்ளிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையது. இந்தக் குழுக்கள் ஆரம்பத்தில் போதைப்பொருள் கடத்தலில் கவனம் செலுத்தியிருந்தாலும், 2007க்குப் பிறகு அவர்களின் மோதல்கள் தொடர்ச்சியான வன்முறைக் கொலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கின.
பாபாவின் கும்பல், பணக்காரர்களைக் குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் வருவாயைக் குவித்தது. அதில் பெரும்பங்கு சோயாகானுக்குச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு பாபா, சிறையில் அடைக்கப்பட்டபோது பிஷ்னோய்க்கும் அவருக்கும் இடையே நடபு தொடர்ந்துள்ளது. இருவரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் குற்றச் செயல்களை ஒருங்கிணைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.