தொடர்ந்து 10ஆண்டுகள்! மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து 50 பேரை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கணவர்!
பிரான்ஸ் நாட்டில் 71 வயது ஓய்வூதியம் பெறும் கணவர் தன்னுடைய 72 வயது மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்திவந்துள்ளார். இதுதொடர்பாக மனைவி புகார் அளித்ததன் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, 71 வயதான முன்னாள் அரசு மின் நிறுவன EDF ஊழியரான கணவருடன் சேர்த்து 50 பேர் அழைத்து வரப்பட்டனர். இந்த வழக்கில், 26 முதல் 74 வயது வரையிலான ஆண்கள் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வதற்காகவே, கணவர் பலரை பணிகளில் சேர்த்துள்ளார்.
இந்த பாலியல் வன்புணர்வை மனைவி அறிந்திருக்கவில்லை என்றும், அவர் தீவிரமான போதைக்குள் தள்ளப்பட்டு இருந்ததாகவும் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மொத்தமாக 92 பாலியல் வன்புணர்வுகள் 72 ஆண்களால் நடந்திருப்பதாகவும், அதில் 51 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பப்படி அனைத்து விசாரணைகளும் வெளிப்படையாகவே இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கின் மூலம் பரந்த அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், அத்துடன் தனக்கு நடைபெற்ற இந்த துயரம் வேறு யாருக்கும் நடந்துவிட கூடாது பாதிக்கப்பட்ட பெண் விரும்புவதாகவும் அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.