டெல்லி | பி.ஆர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது காலணி தாக்குதல்.. நடந்தது என்ன?
ராகேஷ் கிஷோர் என்ற 71-வயதான வழக்கறிஞர் ஒருவர், கடந்த அக்டோபர் மாதம் 6 தேதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது காலணி வீசியிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் ஒருவரால் காலணியால் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ராகேஷ் கிஷோர் காலணியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறும்போது, ”பி.ஆர் கவாய் மீது காலணி வீசியதற்கு தான் தண்டனை தருகிறேன்” எனக் கூறி தன்னை காலணியால் தாக்கியதாக தெரிவித்தார். தொடர்ந்து, நாங்கள் அதற்கு எதிராக சனாதான முழக்கங்களை எழுப்பினோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பி.ஆர் கவாய் மீது காலணி வீசிய நபர் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் காரணமாக கர்கர்டூர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

