ஆடம்பர வீடு சர்ச்சை To மதுபான கொள்கை முறைகேடு வழக்கு | ஆம் ஆத்மி தோல்விக்கான 7 முக்கிய காரணங்கள்!
1. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்காததே முக்கியக் காரணம்!
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அமோக வெற்றியைப் பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏற்க இருக்கிறது. பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றதோடு 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆக மொத்தம் 48 தொகுதிகளுடன் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.
இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜவுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவியது. ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவ, மிகக் குறைந்த அளவே வாக்கு வித்தியாசத்தைப் பெற்றிருந்தாலும், அதற்குக் காரணம் காங்கிரஸே எனக் கூறப்படுகிறது. அது, பிரித்த சில ஆயிரம் ஓட்டுகளே ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியிருப்பதற்குக் காரணமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை காங்கிரஸ் கட்சி பிரித்ததால் மூன்று சதவீத வாக்கு முன்னிலையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரசுக்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் இருக்கும் நிலையில் கூட்டணியாக போட்டியிட்டு இருந்தால் 49 சதவீத வாக்குகளை பெற்றிருக்கலாம்.
சில தொகுதிகளில் மட்டுமே பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் தற்போது முன்னிலையில் இருக்கும் தொகுதிகளில்கூட, ஆம் ஆத்மி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் முன்னிலையில் உள்ளது. சில தொகுதிகளில் மட்டுமே பாஜக குறைந்த வாக்கு சதவீதத்தைக் கொண்டு இருக்கிறது. ஒருவேளை, காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருந்தால் பாஜக தோல்வியைத் தழுவியிருக்கும். அக்கட்சிகள் இரண்டும் ஈகோ போட்டியில் தனித்தனியே களமிறங்கியதால் இரண்டும் சூடுபோட்டுக் கொண்டுள்ளது. ஆம், i-n-d-i-a கூட்டணியில் இணைந்திருந்த அவ்விரு கட்சிகளும், டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஆம் ஆத்மியின் தோல்விக்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
2. கெஜ்ரிவாலின் ஆடம்பர வீடு சர்ச்சை
டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், ஆடம்பரமான வீடு கட்டுவதில் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிக்க அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.40 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக மறுத்தது. ஆயினும், அதிகப்படியான செலவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு பாஜக சவால் விடுத்தது.
சிஏஜி விசாரணையில், டெல்லி முதல்வரின் ‘ஷீஷ் மஹால்’ புதுப்பித்தலுக்கான முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது. பின்னர், 2020ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது அது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, டெல்லி தேர்தலில் எதிரொலித்துள்ளது.
3. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கும் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் சிங், மணிஷ் சிசோடியோ ஆகியோர் கைது சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு 2021-ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 800-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமை வழங்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், அதில் ஆதாயம் அடைந்த மது விற்பனையாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
4. அத்தியாவசிய பணிகளில் கவனமின்மை
2015 மற்றும் 2020 தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெரிய வெற்றிகளைப் பெற்றது. அதற்குக் காரணம், அதன் முதல் இரண்டு பதவிக்காலங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகள் காணப்பட்டன. மின்சாரம் மற்றும் நீர் மானியங்கள் வாக்காளர்களை மகிழ்ச்சியடையச் செய்தன. ஆனால், சமீபகாலமாக இவையனைத்திலும் ஆம் ஆத்மி தோல்வி கண்டுள்ளது. குடிநீர் வினியோகம், சாலைகள் பராமரிப்பு, திடக்கழிவு அகற்றுதல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்றவற்றில் ஆம் ஆத்மி அரசு கவனத்தை ஈர்க்க தவறிவிட்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
5. டெல்லி கலவர வழக்கு
வடகிழக்கு டெல்லி கலவர வழக்குகளை விசாரித்த டெல்லி நீதிமன்றம், கலவரம் தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரை விடுவித்ததும், அக்கட்சிக்கு தேர்தல் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.
6. பழைய பாணியிலேயே பிரசாரம்
புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், பழைய பாணியிலேயே தன்னுடைய தேர்தல் பிரசாரத்தைக் கையாண்டார். அதனால், அவர் தன்னுடைய முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதைவைத்து வெற்றிபெறலாம் என கணக்கு போட்டார். அது, தற்போது தவறாக முடிந்துள்ளது. மேலும், அவர் மக்களின் தேவைகளை முன்னிறுத்துவதைத் தவிர்த்து பாஜகவையே சாடி வந்தார்.
7. பேசுபொருளான யமுனை நீர் ’விஷம்’?
ஹரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்ததும் தேர்தலின் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தக்க பதிலடி கொடுத்ததுடன், யமுனை ஆற்று நீரைப் பருகி, அதை வீடியோவாகவும் வெளியிட்டனர்.