
நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையின்போது, தங்களுடைய சகோதரர்களுக்கு மற்றும் சகோதரர்கள் என நினைக்கும் ஆண்களுக்கு, பெண்கள் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இந்த நிலையில், டெல்லியில் ராக்கி கட்ட சகோதரன் வேண்டும் என தங்களுடைய மகள் கேட்டதைத் தொடர்ந்து, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெற்றோர் செய்த சம்பவம், அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) சாகர் சிங் கல்சி, “டெல்லி சட்டா ரயில் சவுக் பகுதியில் வசித்து வரும் தம்பதி ஒருவர், தங்களின் ஒரு மாதக் குழந்தையைக் காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து, சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்தியதில், தம்பதி ஒன்று பைக்கில் வந்து குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவர்கள், டெல்லி தாகூர் கார்டன் நகரில் ரகுபீர் நகர் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் குப்தா மற்றும் அனிதா குப்தா ஆகியோர் என தெரியவந்தது. அவர்களுக்கு 17 வயதில் மகன் ஒருவர் இருந்துள்ளார். கடந்த ஆண்டு அந்தச் சிறுவன் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில், வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது, ’ராக்கி கயிறு கட்ட சகோதரன் வேண்டும்’ என அவர்களின் 15 வயது மகள் தன்னுடைய ஆவலை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால், சஞ்சய் தம்பதி கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார். அவருக்கு எதிராக 3 குற்ற வழக்குகள் உள்ளன. டாட்டூ கலைஞராக சஞ்சய் இருந்து வருகிறார். அவருடைய மனைவி மெகந்தி கலைஞராக உள்ளார். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தன்னுடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்ற இத்தகைய செயலில் தம்பதி ஈடுபட்டனரா அல்லது வேறு ஏதேனும் கடத்தல் பின்னணி காரணம் இருக்கிறதா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.