\
Delhi CJP Protest Abhijit Deepke Yet to Return House
Abhijit Dipke with Parents web

டெல்லி CJP போராட்டம் | வீடு திரும்பாத அபிஜித் தீப்கே.. கவலையில் பெற்றோர்!

மஹாராஷ்டிரா அரசு சார்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேயின் பெற்றோரைச் சந்தித்து பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார் அமைச்சர் சஞ்சய் ஷிர்சத் .
Published on
Summary

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையால் மே 3 தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் ஜனதா கட்சி சார்பில் அபிஜித் தீப்கே தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து, இறுதியில் அவர் பதவி விலகினார். இந்த வெற்றி மாணவர் போராட்டத்தின் வலிமையை வெளிப்படுத்தியது.

செய்தியாளர்; M. மீரா

மே-3ஆம் தேதி நடந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்ததால் நாடு முழுவதும் எழுந்த புகாரையடுத்து, நீட் தேர்வை தேசிய தேர்வு முகைமை ரத்து செய்தது. ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர்.

Abhijit Dipke
Abhijit Dipke web

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த போராட்டம் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த வெற்றி மாணவர்களின் போராட்ட வலிமைக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால், போராட்டம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அபிஜித் தீப்கே இன்னும் வீடு திரும்பாதது அவரது குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Shiv Sena's Sanjay Shirsat Meets Abhijit's Parents
Shiv Sena's Sanjay Shirsat Meets Abhijit's Parentsweb

”தனது மகன் இந்தியாவுக்குத் திரும்பி, போராட்டத்தைத் தொடங்கியதிலிருந்து, நான் எப்போதும் கவலையுடனேயே இருந்தேன். தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தேன். ஒவ்வொரு காலையிலும், ஏதேனும் அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் பார்த்து விடுவோமோ என்ற பயத்தில் என் மொபைல் போனைப் பார்க்கவே அஞ்சினேன். அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று தெரிந்துகொள்ள உடனடியாக அவனது நண்பர்களை அழைப்பேன்” என்று அபிஜித்தின் தாயார் கூறியுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் அபிஜித்தின் பெற்றோரை சிவசேனா அமைச்சர் ஷிர்சத் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அபிஜித்தின் தலைமையிலான மாணவர் இயக்கம் தனது இலக்கை அடைந்துள்ளது. இது இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி” என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், 36 நாட்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அபிஜித்துக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் இன்னும் வீடு திரும்பாததால் அவரது பாதுகாப்பு குறித்து பெற்றோர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Abhijit Dipke
Abhijit Dipkeweb

மேலும், டெல்லியில் இருந்து மகாராஷ்டிராவுக்கு அபிஜித் திரும்பியதும் அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஷிர்சத் கூறினார்.

”போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆனால், எனது தொகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இந்தப் புரட்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், அவருக்கு அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லை; இந்தப் போராட்டத்திற்கான பெருமையைக்கூட அவர் விரும்பவில்லை. மக்களின் ஆதரவு இருந்ததால்தான் திப்கே வெற்றி பெற்றார்’’ என்று ஷிர்சாத் கூறியுள்ளார்.

Delhi CJP Protest Abhijit Deepke Yet to Return House
’வினாத்தாள் கசிவுக்கு இருமடங்கு தண்டனை..’ புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்! விவரம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com