டெல்லி: சுகாதார சேவைகளுக்கான சிஏஜி.. ஆம் ஆத்மி மேல் அடுக்கடுக்காண குற்றச்சாட்டு
“ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசால் நிலுவையில் இருந்த 14 சிஏஜி அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என முதல்வர் ரேகா குப்தா தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட டெல்லியின் சுகாதார சேவைகள் குறித்த சிஏஜி அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் பல மருத்துவமனைகளில் ஐ சி யூ படுக்கைகள் இல்லை, ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது, அதற்கு மேலாக மொஹல்லா மருத்துவமனைகளில் கழிப்பறைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கையின் தரவுகளின்படி தலைநகர் டெல்லியில் இன்னும் படுக்கைகள் இல்லாத 14 மருத்துவமனைகள் உள்ளன, 12 மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதி கிடையாது, இதைத் தவிர கழிப்பறைகள் இல்லாத பல மொஹல்லா கிளினிக்குகள் செயல்படுகிறது.
கொரோனா காலத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு வழங்கிய 787.91 கோடி பெற்ற ஆம் ஆத்மி அரசு அதில் 582.82 கொடியை மட்டும் செலவிட்டதாகவும், இதன் காரணமாக கொரோனாவின் இரண்டாவது ஆலையின் போது டெல்லி அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
அடுத்ததாக சுகாதார பணியாளர்கள் ஆள்சேர்ப்பு, அவர்களுக்கான ஊதியம் வழங்கியதிலும் மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன்படி, ஆம் ஆத்மி அரசு ஊதியம் வழங்குவதற்காக 52 கோடி பெற்று அதில் 30.52 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை; உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை மற்றும் முழுமையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் கொரோனா காலத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக டெல்லியில் கொரோனா அதிகமாக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல் 2016 -17 மற்றும் 2020-21 க்கு இடையில் மருத்துவமனைகளில் 32,000 புதிய படுக்கைகளை சேர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி அரசால் 1357 ( 4.24 சதவீதம்) புதிய படுகைகள் மட்டுமே நிறுவப்பட்டது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாக பாஜக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் செவிலியர் பணியாளர்களில் 21% மற்றும் மருத்துவ ஊழியர்களில் 38% பற்றாக்குறை உள்ளது. ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஜனக்புரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் 50 முதல் 74 சதவீத மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
மேலும், 21 மொஹல்லா கிளினிக்குகளில் கழிப்பறை வசதி இல்லை, ஆறு கிளினிக்குகளில் சிறிய மேஜைகள் கூட இல்லை மற்றும் 12 கிளினிக்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.