150 பயணிகள் மற்றும் எம்.பிக்களுடன் டெல்லிக்கு சென்ற விமானம்... சென்னையில் அவசரமாக தரையிறங்கியது!
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம், வானிலை மற்றும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சென்னையில் (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இரவு அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் இருந்த பயணிகளில் குறைந்தது நான்கு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றிலிருந்து இரவு 8.04 மணிக்கு விமானம் புறப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம், சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.பி. வேணுகோபால், ஏர் இந்தியா விமானம் தரையிறுக்கும் போது ஓடுதளத்தில் மற்றொரு விமானம் வந்ததாகவும், விமானி துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (மோகா) மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஆகியவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, " திருவனந்தபுரத்தில் முதல் டெல்லி வரை செல்லும் ஏர் இந்தியா AI 2455 விமானம் என்னையும் பல எம்பி க்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்றது. தாமதமான புறப்பாடாகத் தொடங்கிய பயணம் ஒரு பயங்கரமான பயணமாக மாறியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, நாங்கள் முன்னேறி செல்லவும் முடியாமல் தரையிரங்கவும் முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானிலே தத்தளித்தோம்.
பின்னர் கேப்டன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கையாக விமானத்தை சென்னைக்கு திருப்பி விடப்பட்டார். அப்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறக்கப்பட்டது. அது விமானத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் உயிர் பயத்தை காட்டியதாக வேணுகோபால் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கையாக விமானம் சென்னையில் தரைவிறங்கியதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் வேறு எந்த விமானமும் வரவில்லை என்று குறிப்பிட்ட ஏர் இந்தியா, பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.