ரக்ஷா பந்தன்: பீகார் ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள்!
பீகார் தலைநகர் பாட்னாவில் `கான்குளோபல் ஸ்டடிஸ்’ என்ற ஆன்லைன் கோச்சிங் சென்டரை ஆசிரியர் கான் என்பவர் நடத்திவருகிறார். இவர் மாணவர்களுக்குபுரியும் விதத்தில் எளிமையான முறையில் கற்பிப்பதால் அம்மாநிலத்தின் பிரபலமான யூடியூபராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, அவரது கோச்சிங் சென்டரில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் விழாவின்போது, அவரின் 15 ஆயிரம் மாணவிகள் சூழ்ந்துகொண்டு அன்போடு ராக்கி கட்டி மகிழ்ந்தனர். இதுகுறித்து உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பேசிய ஆசிரியர் கான், தனது மணிக்கட்டில் 15,000க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் எடை காரணமான தனது கையை கூடஉயர்த்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இது நிகழ்வுகுடும்ப உணர்வுக்கும் அப்பாற்பட்ட ஓர் பிணைப்பைக் காட்டுவதாகவும், தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றும் உணர்ச்சி பொங்க தெரிவித்தார். மனித நேயத்தைவிட உயர்ந்த மதம் எதுவும் இல்லை என்பதை இது நிரூபிப்பதாகவும், எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைத்து மாணவிகளும் சாதி, மதம்,மாநில வேறுபாடுகளைக் கடந்து என்னிடம் அன்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஆசிரியர்கான் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.