எய்ம்ஸ், அயோத்தி
எய்ம்ஸ், அயோத்திpt web

அயோத்திக்காக டெல்லி எய்ம்ஸ்-க்கு அரை நாள் விடுப்பா? சர்ச்சைகளையடுத்து திரும்பப்பெறப்பட்ட அறிக்கை!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒட்டி டெல்லியில் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
Published on

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒட்டி ஜனவரி 22 ஆம் தேதி மத்திய அரசு, மத்திய அரசு அலுவலகங்களுக்கு மதியம் 2.30 மணி வரை விடுமுறையை அறிவித்திருந்தது. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சில மாநிலங்கள் பொதுவிடுமுறையாகவும் அறிவித்தன.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்pm modi

அதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசுத் துறைகளுக்கு அரைநாள் விடுமுறைக்கான முன்மொழிவை ஆளுநர் சக்சேனாவிற்கு அனுப்பிய நிலையில் ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில், டில்லியில் உள்ள நான்கு மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகள் அரைநாள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அகில இந்திய மருத்துவ எய்ம்ஸ் மற்றும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை ஆகிய இரு முதன்மை மருத்துவமனைகள் அரைநாள் விடுமுறையை அனுசரிக்க போகின்றன என தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “எய்ம்ஸ் டெல்லி அயோத்தி ராமர் கோவிலில் "பிரான் பிரதிஷ்டா" விழாவையொட்டி, ஜனவரி 22, 2024 அன்று மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறையைக் கடைப்பிடிக்கும். முக்கிய மருத்துவ சேவைகள் செயல்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “அனைத்து துறைகளின் தலைவர்கள், கிளை அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்திருந்தனர்.

உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “ராமர் அவரை வரவேற்பதற்காக சுகாதார சேவைகள் தடைபடுவதை ஒப்புக்கொள்வாரா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஹே ராம்.. ஹே ராம்” என தெரிவித்திருந்தார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. சாகேத் கோகலே, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷா முகமது போன்றோரும் இம்முடிவுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. நாளை வெளி நோயாளிகள் (Appointment basis) பிரிவு வழக்கம் போல செயல்படும் என்றும், ஏற்கெனவே அறிவித்தப்படி அவசர சிகிச்சை பிரிவும் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com