உத்தரகண்ட்: மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

உத்தரகண்ட்: மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு
உத்தரகண்ட்: மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு
உத்தரகண்டில் இயற்கை சீற்றத்தால் உருக்குலைந்துள்ள பகுதிகளை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஆய்வு செய்கிறார்.
இமயமலை மாநிலமான உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக பெய்த பெருமழை பெருத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1,300-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கூறியுள்ளனர். சுற்றுலாத்தலமான நைனிடால் பகுதி மழையால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு மட்டும் 28 பேர் உயிரிழந்துவிட்டனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில், மலையேற்ற குழுவைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பயணம் செய்யவிருந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் சாலை வழியாகச் சென்று வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார். அவருடன் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தன் சிங் ராவத் ஆகியோரும் சென்றனர். இதுபோன்ற சூழலில் உத்தரகண்ட் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
இதனிடையே, உத்தரப்பிரதேசம், சிக்கிம், மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்து வருகின்றது. மழையால் சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுடன் கேங்க்டாக் நகரை இணைக்கும் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com