ஐபிஎல் நடக்குமா? நடக்காதா? நிறுத்தப்பட்ட ஆட்டம்.. கேள்விக்குறியான பாதுகாப்பு.. பிசிசிஐ அதிரடி முடிவு
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டி ஆரம்பிக்கும் முன்பே, “இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி போட்டிகளை நிறுத்த வேண்டும்” என்ற குரல்கள் இணையத்தில் எழுந்தன. ஏனெனில், வான் வெளித்தாக்குதல்கள் நடத்தப்பட்ட பதான்கோட்டிலிருந்து தர்மசாலா சுமார் 90 கிமீ தொலைவில்தான் அமைந்துள்ளது.
ஆனாலும், போட்டி நடத்தப்பட்டது. முதலில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 122 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில், மைதானத்திலிருந்த இரு கோபுர விளக்குகள் அணைந்தன. இது வேண்டுமென்றே அணைக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விளக்குகள் செயலிழந்ததா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே மின்தடை ஏற்படுத்தப்பட்டது விரைவில் உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வீரர்கள், நடுவர்கள் மற்றும் மைதானத்தில் இருந்தவர்கள் என அனைவரும் மைதானத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். போட்டி ரத்து செய்யப்பட்ட பின் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ‘பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட்டபடியே வெளியே வந்தனர்.
போட்டியை நிறுத்தும் முடிவு தர்மசாலா கிரிக்கெட் சங்கத்தால் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால் வீரர்கள் எப்படி அப்பகுதிகளிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், தர்மசாலாவின் காகர் விமான நிலையம் அருகிலுள்ள காங்க்ரா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மூடப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில்தான் நடப்பு ஐபிஎல் தொடரின் எதிர்காலம் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஐபிஎல் தொடர் தொடர்பாக பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா, வீரர்களை ரயில் மூலம் டெல்லி அழைத்துச் செல்லமுடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், நிலைமைகளைக் கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பெற்று இறுதி முடிவை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ள ராஜீவ் சுக்லா எங்கள் முன்னுரிமை அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்.. மேலும், தொடரின் எதிர்காலம் குறித்த முடிவு சூழலுக்கு ஏற்றவாறு இருக்குமெனவும் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் வீரர்களுக்காக சிறப்பு வந்தேபாரத் ரயிலை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சிறப்பு ரயில் இரு அணிகளின் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்புப் பணியாளர்கள் என சுமார் 300 நபர்களை போதுமான அளவு பாதுகாப்புடன் கொண்டு செல்லும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் புறப்படும் நேரம் மற்றும் வழித்தடம் ஆகியவை வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடமும் இதுகுறித்து ஆலோசித்து வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.