”இனி ஏர் இந்தியாவில் ஏற மாட்டேன்” - Ex ஊழியரின் பதிவைப் பகிர்ந்து டேவிட் வார்னர் பதில்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். தவிர, விமானம் மோதிய குடியிருப்பில் இருந்த மருத்துவ மாணவர்களும் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில், 274 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விமானத்தில் பயணித்த 241 பேரும் கட்டடத்தில் இருந்தவர்களில் 33 பேரும் அடங்குவர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்கெனவே பிரச்னைகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் பயணித்த ஒருவர்கூட, இதுதொடர்பான வீடியோக்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்கெனவே பிரச்னைகள் இருந்ததாக கூறும் முன்னாள் ஏர் இந்தியா ஊழியரின் பதிவு ஒன்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார். அதில், ”இது நான் அடிக்கடி பயணிக்கும் ஒரு விமானம் எனவும், இந்த விமானம் பல வருடங்களாகப் பிரச்னைகளைச் சந்தித்து வருவதாகவும், இதுதொடர்பாக குழுவினர், விமானிகள், பொறியாளர்கள் என அனைவரும் உண்மையில் எப்போதும் பதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர் எனவும் ஆனால் நிறுவனம் எந்த ஊழியர்களையும் இதுகுறித்து ஒரு பொதுவெளியில் பேச விடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கே இதுபோன்ற அனுபவம் இருந்ததாகவும், அந்த நெருக்கடியிலும் விமானத்தை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைப் பகிர்ந்துள்ள டேவிட் வார்னர், ”இனி ஏர் இந்தியா விமானங்களில் பறக்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இது உண்மையாக இருந்தால் அது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் குடும்பங்களுக்கும் இது பற்றிய எண்ணங்கள் வருகின்றன. இந்திய விமான நிறுவனத்துடன் தொடர்ந்து பறக்கப் போவதில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.