உடையிலும் ஆபத்தான ரசாயனங்கள்.. ஆய்வில் பகீர் தகவல்!
உண்ணும் உணவில் மட்டுமல்ல... உடுத்தும் உடையிலும் ஆபத்தான ரசாயனங்கள் கலப்பு அதிகம் இருப்பதாக அதிர வைக்கும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதர்களுக்கு ஆரோக்கிய கேட்டை ஏற்படுத்தும் நானில் ஃபீனால் என்ற ஆபத்தான ரசாயனம் இந்திய ஜவுளித்துறையில் அதிகளவு பயன்படுத்தப்படுவது டாக்ஸிக்ஸ் லிங்க் (TOXICS LINK) என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
10 நகரங்களில் உள்ள பிரபல துணிக்கடைகள், ஆன்லைன் தளங்கள் மூலம் 40 ஆடைகள் வாங்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்ததில் 15இல் நானில் ஃபீனால் இருந்தது தெரியவந்ததாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உள்ளாடைகளிலும் குழந்தைகளுக்கான ஆடைகளிலும்கூட இந்த ரசாயனம் அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. நானில்ஃபீனால் என்ற இந்த ரசாயனம் மனித உடலில் ஹார்மோன்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடியது என்றும் உடல் வளர்ச்சி குறைபாட்டிலிருந்து புற்றுநோய் வரை பல விதமான பாதிப்புகள் இதனால் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜவுளித் துறை மட்டுமல்லாமல் தோல் பொருட்கள், டிடர்ஜென்ட் பவுடர்கள், அழகு சாதனப்பொருட்களிலும் இந்த வேதிப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஓடும் கூவம் ஆறு உள்ளிட்ட நாட்டின் 5 ஆறுகளில் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளிலும் இந்த ரசாயனம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூவம் ஆற்றில் எடுக்கப்பட்ட மாதிரியில் ஒரு லிட்டர் நீரில் 70 மைக்ரோ கிராம் நானில்ஃபீனால் இருந்ததாக தெரியவந்துள்ளது. மனித குலத்திற்கே ஆபத்தான இந்த ரசாயன பயன்பாட்டை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை என டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனத்தின் இணை இயக்குநர் சதீஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் பலவற்றில் இந்த ரசாயனத்தை பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.