ஆந்திராவில் கரையைக் கடந்தது முரசு புயல்.. 110 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று!!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, நவம்பர் 1-ம் தேதி புயலாக மாறியது. இந்தப்புயலுக்கு முரசு எனப் பெயர் வைக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 'முரசு' புயல் தீவிரப் புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தொடர்ந்து, ஆந்திராவில் கரையக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புயல், நேற்று இரவு சென்னைக்கு வடகிழக்கே 210 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்திருந்தது.
இந்தச்சூழலில் தான், நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இந்தப் புயல் ஆந்தராவை நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கத் தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து, ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே இன்று அதிகாலை 3.30 மணி முதல் 5 மணிக்கு முரசு புயல் கரையைக் கடந்திருப்பதாகவும், கரையைக் கடக்கும்போது 100கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் பலத்தக் காற்று வீசியதாகவும், இடையிடையே 120 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக, கடலோர ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

