அயோத்தி ராமர் கோயில் நன்கொடை | விசாரணைக்கு முன்பே மீட்கப்பட்ட 58 லட்சம் ரூபாய்!
உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவகாரத்தில் நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஒன்றை அமைத்துள்ள நிலையில், அக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அந்தக் குழு, இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, கோயில் நன்கொடைகளிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 58 லட்சம் ரூபாய் மர்மமாகக் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அறக்கட்டளையின் சில உறுப்பினர்கள் தங்களது சொந்த உள் விசாரணையை நடத்தி, திருட்டு வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஒருவரான அவினாஷ் சுக்லாவிடமிருந்து 58 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர். அதாவது திருட்டுக் குற்றச்சாட்டுகள் வெளியாவதற்கு முன்பும், இதை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதற்கும் முன்பே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறையான புகார் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே இந்த மீட்பு நிகழ்ந்துள்ளதால், இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணைக்கு முன்பே மீட்புப் பணிகள் ஏன் தொடங்கின என்பது குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விவகாரம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசியல்ரீதியாகப் புயலைக் கிளப்பியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

