\
Political Criticism for GTA 6
Political Criticism for GTA 6 Reuters

இளைஞர்களை திசைதிருப்பும் GTA 6: ஜென்ஸி போராட்டத்துக்கு எதிரான ஆயுதமா? இணையத்தில் அனல்பறந்த விவாதம்!

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள GTA 6 கேம் ஜென்ஸி இளைஞர்களின் போராட்டத்துக்கு எதிரான உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
Published on: 
Summary

GTA 6 கேம் வெளியீடு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி, அரசியல் மற்றும் சமூக விவாதங்களை தூண்டியுள்ளது. இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஜென்ஸி இளைஞர்களை கவரும் முயற்சியில் GTA-வை பயன்படுத்தியுள்ளன.

உலகளவில் அதிகம் பிரபலம் வாய்ந்த வீடியோ கேம் தொடராக GTA என அழைக்கப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto - GTA) திகழ்ந்து வருகிறது. 1997-ம் ஆண்டு இந்த கேம் தொடரின் முதல் வெர்சன் வெளியிடப்பட்ட நிலையில், அதன் பின்னர் 5 வெர்சன்கள் வெளியிடப்பட்டன.

கடைசியாக GTA கேம் தொடரின் 5-வது வெர்சனான GTA 5 கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த நவம்பர் 19-ம் தேதி GTA-வின் ஆறாவது வெர்சனான GTA 6 வெளியாகி உலகையே உலுக்கியுள்ளது. வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே உலகம் முழுவதும் 1.5 கோடிக்கும் (15 Million) அதிகமான பிரதிகள் விற்பனையாகி அதிகம் விற்பனையான கேம் தொடர் என்ற சாதனையை படைத்தது.

PlayStation Store மற்றும் Xbox Store ஆகியவற்றில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானோர் கேமைப் பதிவிறக்கம் (Download) செய்ததால், உலகின் பல பகுதிகளில் இணைய வேகம் குறைந்ததோடு, கேமிங் சர்வர்களே முடங்கும் நிலையும் ஏற்பட்டது. Twitch மற்றும் YouTube Gaming தளங்களில் ஒரே நேரத்தில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் GTA 6 நேரலை வீடியோக்களைப் பார்த்ததும் உலக சாதனையாக பதிவாகியுள்ளது. இந்தியாவிலும் 90ஸ் கிட்ஸ் மற்றும் ஜென்ஸி இளைஞர்களிடையே இந்த கேம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழலில் இந்த கேமை முன்வைத்து பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களை குறிவைத்து இயங்கும் பிரதமர் மோடி, தனது X மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் "இந்தியா ஒரு புதிய ஆட்டத்தை ஆடுகிறது!" (India is playing a whole new game!) என்ற தலைப்பில் GTA பாணியிலான கிராபிக்ஸ் படங்களைப் பகிர்ந்தார்.

அதில் பலவீனமாக இருந்த இந்தியாவை தனது அரசு நவீனப்படுத்தியதாக படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் பாஜகவின் மூத்த தலைவர்களும் இப்படியான புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். பாஜகவின் இத்தகைய முயற்சிகள் ஜென்ஸி இளைஞர்களை கவரும் விதமாக இருப்பதாக பார்க்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ X பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், திருட்டு, வன்முறை மற்றும் சட்டவிரோதச் செயல்களைக் கொண்டாடும் ஒரு கேமுடன் பிரதமர் தன்னை ஏன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதுவும் ஜென்ஸி இளைஞர்களை குறிவைத்து பதிவிடப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அரசுகளை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த போராட்டங்களில் இருந்து இளைஞர்களின் கவனத்தை திசைதிருப்பவே GTA 6 கேம் அவசர அவசரமாக வெளியிடப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அந்த கேமில் கிளிச்கள் எனப்படும் பல்வேறு மென்பொருள் குறைபாடு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரம் இந்த கேம் இளைஞர்கள் திருட்டு வேலைகளை செய்ய ஊக்கப்படுத்துகிறது என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. கேமில் உள்ள குற்றச் செயல்களை நிஜ வாழ்க்கையில் தெருக்களில் இறங்கிச் செய்ய வேண்டாம் என அமெரிக்க காவல்துறை இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சர்ச்சைகள் GTA 6 கேம் எந்த அளவு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Political Criticism for GTA 6
பூதாகரமாகும் தங்க கலப்பட விவகாரம்: வாடிக்கையாளருக்கு இழப்பு எவ்வளவு? எச்சரிக்கை விடுத்த BIS அமைப்பு!