பூதாகரமாகும் தங்க கலப்பட விவகாரம்: வாடிக்கையாளருக்கு இழப்பு எவ்வளவு? எச்சரிக்கை விடுத்த BIS அமைப்பு!
இந்தியாவில் தங்க நகைகளில் ரீனியம் மற்றும் டங்ஸ்டன் போன்ற உலோகங்களை கலப்பதன் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதனால் நுகர்வோருக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. BIS அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. நகை சோதனை இயந்திரங்களை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாகத் தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளில் ரீனியம் (Rhenium) மற்றும் டங்ஸ்டன் (Tungsten) போன்ற அதிக அடர்த்தி கொண்ட உலோகங்களைக் கலந்து கலப்படம் செய்யும் மோசடிகள் அதிகரித்து வருவதாக இந்தியத் தர நிர்ணய ஆணையம் (BIS) மற்றும் நகை வர்த்தகச் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
சுத்தமான தங்கத்தை உருக்கும்போது, குறிப்பிட்ட சதவீதம் ரீனியத்தை அதனுடன் சேர்த்து உருக்கி நகைகளாகவோ அல்லது தங்கக் கட்டிகளாகவோ மாற்றுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் அடர்த்தியும் (19.32 g/cm³) ரீனியத்தின் அடர்த்தியும் (21.02 g/cm³) கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதால், நகையைக் கையில் தூக்கிப் பார்த்தாலோ அல்லது சாதாரண எடைச் சோதனை (Specific Gravity Test) செய்தாலோ வித்தியாசம் தெரியாத நிலை உள்ளது.
மேலும், நகைக் கடைகளில் வழக்கமாகச் செய்யப்படும் அமிலச் சோதனையில் ரீனியம் கரையாது என்பதால்,தங்கத்தின் சோதனையை அறிவதில் சிக்கல் நிலவுகிறது. அதே போல நகைக் கடைகளில் உள்ள பழைய XRF (X-Ray Fluorescence) இயந்திரங்களில் ரீனியம் உலோகத்தை அடையாளம் காணும் மென்பொருள் (Calibration) இல்லாவிட்டால் அந்த இயந்திரம் ரீனியத்தையும் தங்கமாகவே கணக்கிட்டு தவறாகக் காட்டும் அபாயம் உள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான சிறிய கடைகளில் பழைய XRF இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் மோசடிக்கான அபாயம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
10 கிராம் 22 காரட் நகையில் 10% ரீனியம் கலக்கப்பட்டால், நுகர்வோருக்கு சுமார் 10 ஆயிரத்துக்கு மேல் இழப்பு ஏற்படும் என்பதால் இது மிகவும் ஆபத்து வாய்ந்த கலப்படமாக உருவெடுத்துள்ளது. மேலும் ரீனியம் கலக்கப்பட்ட நகையை மறுசுழற்சி செய்யும்போது ரீனியம் தனியாகப் பிரிந்து தங்கத்தின் தரத்தைக் கெடுத்துவிடும் என்பதால் அப்போதும் வாடிக்கையாளர்கள் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.
இந்த நிலையில், தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தங்கத்தில் கலப்படம் செய்தவற்கான பொருளை தயாரிப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகை XRF இயந்திரங்களின் மென்பொருளை ரீனியம், ருத்தேனியம் (Ruthenium), இரிடியம் (Iridium) ஆகியவற்றைக் கண்டறியும் வகையில் உடனடியாக அப்டேட்களை மேம்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

