உணவு தீர்ந்ததால் திருமணத்தை நிறுத்திய தந்தை... இறுதியில் மகன் செய்த ட்விஸ்ட்!
சூரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு தீர்ந்துபோனதால் திருமணத்தை நிறுத்தைப்போவதாக மணமகனின் தந்தை தெரிவித்த நிலையில், மணமகன் செய்த சுவாரஸ்ய சம்பவம்தான் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர்கள் ராகுல் பிரமோத் மஹ்தோ மற்றும் அஞ்சலி குமாரி. இவர்கள் இருவருக்கும் குஜராத் மாநிலம், சூரத்தின் வராச்சா பகுதியில் உள்ள லட்சுமி ஹாலில் திருமண விழா நடைபெற்றுள்ளது.
மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் ,உறவினர்கள் என அனைவரும் கலந்துக்கொள்ள எல்லா வகையான திருமண சடங்குகளும் கோலாகலாமகவும் பிரம்மாண்டமாகவும் நடைப்பெற்றுள்ளது. மாலை மாற்றுவது மட்டும்தான் பாக்கி.
இந்நிலையில், உறவினர்களுக்கு விருந்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்ட மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருக்குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற கோபமடைந்த மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மணமகளின் குடும்பத்தினர், எவ்வளவோ கூறியும் மணமகனின் வீட்டாரை சமாதானம் செய்ய முடியவில்லை. இதனால், செய்வதறியாது திகைத்த மணமகளின் குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரச்னையை தீர்த்து வைக்க இருக்குடும்பத்தினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர் காவல்துறையினர்.
இதுகுறித்து , துணை காவல் ஆணையர் டிசிபி அலோக் குமார் தெரிவிக்கையில், “ திருமணத்தில் பெரும்பாலான சடங்குகள் முடிந்துவிட்டது. மாலை மாற்றுவது மட்டுமே எஞ்சியிருந்தது. உணவு பற்றாக்குறை காரணமாக, மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை தொடர மறுத்துவிட்டனர். ஆனால், மணமகன் தனக்கு திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகவும், திருமணத்தைத் தொடரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால், மணப்பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தோம். இருவரும் காவல் நிலையத்தில் முறையாக மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.
தனது தந்தை மறுத்தபோதும் , மணமகனின் துணிச்சலான இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.