பாகி.யைப் புகழ்ந்து பேசினாரா IND Ex ராணுவத் தலைவர்? நடந்தது என்ன? உண்மையை வெளியிட்ட PIB!
இந்திய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக் பாகிஸ்தானின் இராணுவத் திறன்களைப் பாராட்டியதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக் பாகிஸ்தானின் இராணுவத் திறன்களைப் பாராட்டியதாகவும், இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டதாகவும் சமூக ஊடகத் தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இது, போலியானது என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றுக்களை பிஐபி உண்மைச் சரிபார்ப்பு திட்டவட்டமாக நிராகரித்து, ஜெனரல் மாலிக் அத்தகைய கருத்துக்களை எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது.
பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின்படி, இதுதொடர்பாக பாகிஸ்தான் தவறான கணக்குகளைப் பரப்புவதாகவும் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை மீதான நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் கையாளப்பட்ட கிளிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என அது தெரிவித்துள்ளது. முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கும் பிரகாஷ் மாலிக், சிறந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டிருப்பது இந்தியா எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் ஏ.என்.ஐக்கு அளித்துள்ள பேட்டியில், ‘சிந்தூர் நடவடிக்கையின் போது, நாம் ஒருவருக்கொருவர் எல்லைகளைக்கூட கடக்கவில்லை. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அளவு மகத்தானது. இப்போது எங்களிடம் ஸ்டாண்ட்ஆஃப் ஆயுதங்கள் உள்ளன. மேலும் இரு நாடுகளும் அத்தகைய திறன்களைக் கொண்டுள்ளன, எல்லையைக் கடக்காமல் தூரத்திலிருந்து தாக்க அனுமதிக்கின்றன. இது இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இருப்பினும், இந்தியாவில் நிச்சயமாக சிறந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் தரப்பு இந்த வீடியோவை, “ஆபரேஷன் சிந்தூர்போது, நாம் ஒருவருக்கொருவர் எல்லையைக்கூட தாண்டவில்லை. தொழில்நுட்ப முன்னேற்றம் மிகவும் மகத்தானது. பாகிஸ்தானிடம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளன. ரஃபேல்ஸ் மற்றும் S400 அமைப்புகளை அழிப்பது இந்தியாவைவிட அவர்களின் மேன்மைக்கு ஒரு சான்றாகும். நாம் நமது உபகரணங்களை மேம்படுத்த வேண்டும்" எனப் பேசியதாக ஏஐ மூலம் மாற்றம் செய்து இணையத்தில் பரப்பி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து, மே 8ஆம் தேதி அதிகாலை பயங்கரவாதிகளின் 9 முகாம்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு பாகிஸ்தானும் தாக்கியது. பின்னர் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பு இன்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

