
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு கடந்த 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டர். சிலர் பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இப்படங்கள் இணையங்களில் வைரலாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தவிர, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நேரத்தில்தான், இஸ்ரேல் போரை அறிவித்ததுடன், ஹமாஸ் அமைப்பு மீதுதொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் தற்போது காசா பகுதி தம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (அக்.9) டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நில உரிமை, கண்ணியம் மற்றும் மரியாதைக்காகப் போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைத்தள பதிவில், 'இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்' எனப் பதிவிட்டிருந்தார்.