
அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் ஹமாஸ் படையினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை தொடங்கினர். தவிர, தெற்கு இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் குழுவினர் மக்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்ததுடன், ராக்கெட் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஹமாஸ் குழுவினர் நுழைவை அடுத்து இஸ்ரேல் போர் எச்சரிக்கையை அறிவித்ததுடன், பதில் தாக்குதலை நடத்தத் தொடங்கியது. இந்த நிலையில், காசா எல்லையைச் சுற்றி தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசா எல்லைப் பகுதியில் ஒருசில ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் மட்டுமே இருப்பதாகவும், அதனைக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ‘தாக்குதல் நடத்தப்பட்ட எல்லைப் பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களில் சிலர் காசா எல்லையில் எஞ்சியுள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் படையினரிடையே தாக்குதல்கள் நடந்துவருகிறது. தாக்குதல் நடத்திக்கொண்டு இஸ்ரேல் படை முன்னேறுகிறது. இஸ்ரேலில் தற்போது வரை 73 ராணுவ வீரர்கள் உள்பட 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரு நாடுகளிலும் சுமார் 1,100 பேர் இறந்திருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹாசா எல்லைக்குள் உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்பவர் காயம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்கெலோன் பகுதியில் செவிலியராகப் பணியாற்றி வந்த ஷீஜா ஆனந்துக்கு கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என உறவினர்களுக்கு தூதரக அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமெரிக்கா நுழைய வாய்ப்புள்ளதாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. போர்க் கப்பல்களை இஸ்ரேலுக்கு அருகில் கொண்டு செல்வதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கிக் கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.