டெல்லி|நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு அருகே.... காங்கிரஸ் எம்பியிடம் செயின் பறிப்பு!
செய்தியாளர்: ராஜீவ்
டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள, உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த சாணக்யாபுரி பகுதியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா. டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல் நாட்களில் கலந்து கொண்டுள்ளார். எப்போதும் போல் அவர் இன்று காலை (4.8.2025 டெல்லி சாணக்கியாபுரி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவருடன் மற்றொரு தமிழக எம்.பி-யான ராஜாத்தியும் இன்று நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது, போலாந்து நாட்டின் தூதரகத்திற்கு அருகே பைக்கில் வந்த ஒருவர் எம்.பி சுதாவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
ஹெல்மெட் அணிந்து கொண்டு எதிர் திசையில் மெதுவாக வந்து பின்னர் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், எம்.பி கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதுடன், அவர் அணிந்த உடையும் கிழிந்துள்ளது.
இதுகுறித்து எம்.பி சுதா சாணக்கியா பூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது தன்னுடைய 4 பவுனுக்கு அதிகமான தங்க சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தன்னுடைய தங்கச் சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டு விரைந்து நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் எம்.பி சுதா மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.