சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, காங்கிரஸ் கொறடா எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் அமித்ஷா இன்று அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசும் இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிட்டா எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தள்ளார். நாட்டு மக்களின் உணர்வை காங்கிரஸ் கட்சி புண்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.