நடப்பாண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் வற்புறுத்தல் காரணமாக, அவரது அன்னையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி நின்று ஜெயித்த உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
இதில், தாம் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே ராகுல் அபார வெற்றிபெற்றார். குறிப்பாக, வயநாடு மக்களவைத் தொகுதியில் 6,47,445 வாக்குகளைப் பெற்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து மூத்த இடதுசாரித் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார். ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார்.
இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்கவைத்துக் கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதேநேரத்தில், இதே தொகுதியில் தனது தங்கை போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (அக்.15) அறிவித்துள்ளது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே தேதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.