\
Timeline of Major Controversies Under Dharmendra Pradhan
தர்மேந்திர பிரதான்Pt web

பி எம் ஸ்ரீ திட்டம் முதல் நீட் முறைகேடு வரை.. தர்மேந்திர பிரதான் பதவி காலத்தில் எழுந்த பிரச்னைகள்!!

கடந்த கால வரலாறுகளைப் போலவே, தர்மேந்திர பிரதானின் காலக்கட்டத்திலும் மும்மொழி விவகாரம் பேசுபொருளாகியிருந்தது.
Published on

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் எழுந்த முக்கிய சர்ச்சைகள் குறித்துப் பார்க்கலாம்.

2021-ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது, உயர்கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய தேர்வு அமைப்புகளில் மாற்றங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஆனால், அவரது பதவிக்காலம் பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்திருந்தது.

History
Historyகோப்புப் படம்

அதன்படி, 2022 - 2023 காலக்கட்டத்தில் NCERT பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பாடங்களில் இருந்து, முகலாய வரலாறு மற்றும் அரசவைகள், 2002 குஜராத் கலவரங்கள், பனிப்போர் மற்றும் இந்தியாவின் ஜனநாயகப் போராட்டங்களின் அம்சங்கள் குறித்த அத்தியாயங்களையும் குறிப்புகளையும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. கொரானா காலக்கட்டத்தில் மாணவர்களின் கல்விச் சுமையை குறைப்பதற்கான முயற்சி என மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தாலும், இது பாடத்திட்டத்தை “காவிமயமாக்கும்” செயல் என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அடுத்ததாக, 2022 ம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகம் கொண்டு வந்த பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்தாவிடில் மாநிலங்களுக்கான நிதியை விடுக்கமாட்டோம் என மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, பல மாநிலங்கள் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டன. எனினும் தமிழ்நாடு தற்போது வரை இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

மு.க.ஸ்டாலின், தர்மேந்திர பிரதான்
மு.க.ஸ்டாலின், தர்மேந்திர பிரதான்Facebook

கடந்த கால வரலாறுகளைப் போலவே, தர்மேந்திர பிரதானின் காலக்கட்டத்திலும் மும்மொழி விவகாரம் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக, 2025-2026 காலக்கட்டத்தில் இந்தப் பிரச்னை தீவிரமடைந்தது. தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் சிபிஎஸ்இ கொள்கையையும் பிரதமர் ஸ்ரீ திட்டத்தையும் பயன்படுத்தி, மத்திய அரசு மறைமுகமாக இந்தியைத் திணிப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டியிருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டை தர்மேந்திரப் பிரதான் தொடர்ந்து மறுத்து வந்தார்.

மேலும், தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சராக இருந்த காலகட்டம் முழுவதும், நீட் (NEET), ஜேஇஇ (JEE), சியுஇடி (CUET), யுஜிசி நெட் (UGC-NET) உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA), தொழில்நுட்பக் கோளாறுகள், தேர்வு நிர்வாகக் குளறுபடிகள், தவறான மதிப்பீட்டு முறை, தரவுப் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தேர்வு நடத்தும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளால் தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வந்தது.

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்PTI

அந்தவகையில் தான், 2026-இல் வெடித்த நீட் முறைகேடு சர்ச்சைக்கு முன்னோடியாக, 2024-ஆம் ஆண்டிலேயே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, பிகாரில் வெளிச்சத்துக்கு வந்த வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் (Grace Marks) வழங்கப்பட்ட விதம் குறித்த சர்ச்சைகள் மற்றும் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகள் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தை எட்டியதுடன், மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணையில் பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் தலைமை மாற்றம் செய்யப்பட்டதுடன், தேர்வு நடத்தும் நடைமுறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதே ஆண்டில், ஜூன் 19-ம் தேதி வினாத்தாள் கசிவு காரணமாக யுஜிசி நெட்-ஐயும் தேர்வு நடைபெற்ற அடுத்த நாளே தேசிய தேர்வு முகைமை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தது.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்web

அதேபோல, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், துணைவேந்தர் நியமனம், யுஜிசி வரைவு விதிமுறைகள் மாற்றம், CBSE மதிப்பீட்டு முறைகேடு, NCERT பாடப்புத்தக அச்சு மற்றும் விநியோக தாமதம், பாடப்புத்தகம் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவையும் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

2021-ம் ஆண்டு முதல் மத்திய கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் இன்று பதவி விலகியிருக்கும் நிலையில், அடுத்த கல்வி அமைச்சர் யார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Timeline of Major Controversies Under Dharmendra Pradhan
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. CJP போராட்டம் கடந்து வந்த பாதை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com