\
Abhijeet Dipke
Abhijeet Dipkeweb

NEET, CBSE, CUET தேர்வுகளில் குளறுபடி.. போராட்டத்தில் குதிக்கும் 'காக்ரோச் ஜனதா கட்சி'!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் டிப்கே, NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக இந்தியா திரும்புவதாக அறிவித்துள்ளார்.
Published on
Summary

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ‘கரப்பான் பூச்சி’ சர்ச்சை கருத்தை எதிர்த்து, பாஸ்டனில் உள்ள அபிஜித் திப்கே ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற இளைஞர் இயக்கத்தை தொடங்கினார். கல்வித் தேர்வுகளில் பொறுப்புடைமையை வலியுறுத்தும் இந்த இயக்கம், NEET, CBSE, CUET தேர்வுகளில் ஏற்பட்ட கசிவு, குளறுபடிகள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டதை முன்வைத்து, கல்வி அமைச்சரின் பதவி விலகலை கோருகிறது.

கடந்த மே 15ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் போலிச் சான்றிதழ்கள் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "வேலையில்லாமல், எந்தத் தொழிலும் செய்யத் தகுதியற்ற சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப்போல ஒட்டுண்ணிகளைப்போல சமூக வலைத்தளங்களில் எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

இக்கருத்துகளின் எதிரொலியாக, பாஸ்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் உத்தியாளரான அபிஜித் டிப்கே, (Abhijeet Dipke) என்ற 30 வயது இளைஞர் மே 17-ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராமில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற பக்கத்தைத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து CJP-யைத் தொடங்கிய டிப்கே, 'கரப்பான் பூச்சி' எனும் அச்சொல்லை இளைஞர் செயல்பாட்டின் அடையாளமாகவும், கல்வி அமைப்பில் பொறுப்புடைமையை வலியுறுத்தும் ஒரு பிரச்சாரக் கருவியாகவும் உருமாற்றினார்.

Abhijeet Dipke
இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய்..? காரணம் இதுதான்!

இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யின் (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே, ஜூன் 6-ஆம் தேதி இந்தியா திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள அமைதிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கவே தான் திரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

Dharmendra pradhan & modi
Dharmendra pradhan & modiweb

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், NEET வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் இலட்சக்கணக்கான மாணவர்களைப் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய Dipke, பிரதானுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்தியா திரும்புவதற்குத் தான் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழியைப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அமைதியான முறையில் குரல் எழுப்புவதற்கான நேரம் வந்துவிட்டது,

Abhijeet Dipke
"தவறு CBSE-யினுடையது; தண்டனையோ மாணவர்களுக்கு" - ராகுல் காந்தி விமர்சனம்

பிரதான் பதவி விலகக் கோரும் இணையவழி மனுவில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்த தீப்கே, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் வாயிலாகவும் இம்முயற்சிக்கு ஆதரவு பெருகியுள்ளதாகக் கூறினார். NEET, CBSE மற்றும் CUET உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள் தொடர்பான சிக்கல்களால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

"இவ்வளவு பெரிய தவறு நிகழ்ந்த பிறகும், கல்வி அமைச்சர் பதவி விலகவில்லை என்றால், இந்நாட்டில் பொறுப்புடைமை என்பதே எஞ்சி இல்லை என்று அர்த்தம்" என்று அவர் கூறினார். மேலும், கட்டமைப்பு ரீதியான தோல்விகளின் விளைவுகளைப் பிரதானமாக மாணவர்களே சுமக்க நேரிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com