முதல்வர் விஜய்க்கு முக்கியப் பதவி.. அறிவிப்பு வெளியிட்ட உள்துறை அமைச்சகம்!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் (INTER-STATE COUNCIL) செயல்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களிடையேயான கவுன்சிலானது தென் மாநிலங்களின் முதல்வர்கள், வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள், கிழக்கு, மேற்கு மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் சார்பில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். இந்தச் சூழலில் 31-ஆவது தென்மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர்களோடு, ஆறு மாநில தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 2022-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் கடைசியாக 30-ஆவது தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த மாநாடு கூட்டப்படாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் மாநாடு கூட்டப்படவுள்ளது.
காவிரி நதிநீர்ப் பிரச்னை, கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொலை சம்பவங்களால் தமிழகம்- கர்நாடகா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் இந்த விவகாரங்கள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிக்கப்பட்டு நிலையில், குழுவின் துணைத்தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

