மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது?

மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது?
மேகவெடிப்பு என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது?
உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழையே இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேகவெடிப்பு என்றால் என்ன? அது எப்படி நேர்கிறது?
பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக மேகவெடிப்பு பார்க்கப்படுகிறது. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது. பருவமழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்து விடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும்.
இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும். இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்பொழுது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன.
இந்திய வானிலையை பொருத்தவரை இத்தகைய வெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மேக வெடிப்புகள் எப்போது எங்கு நிகழும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய மேகவெடிப்பே உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com