ஜந்தர் மந்தரில் போராட்டம்.. சிஜேபி தலைவர்கள் விடுதலை!!
கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும், எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் போது, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக, மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட, கரப்பான் ஜனதா கட்சி இந்த விவகாரத்திலும் தீவிரம் காட்டியது.
இதுதொடர்பான போராட்டங்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்து வந்த நிலையில் தான் மத்திய அரசு, போராட்டம் நடைபெறும் இடங்களுக்கான பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி உத்தரவிட்டது. எனினும், சிஜேபி நிர்வாகிகள் ஜந்தர் மந்தரின் பூட்டிய கேட்டைத் தாண்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், கடந்த 13-ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனினும், இவர்களில் முக்கிய நிர்வாகிகளான அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகிய இருவர் சிறையிலடைக்கப்பட்டு, மற்றவர்கள் அடுத்த நாளே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச்சூழலில் தான், கடந்த 19-ம் தேதி இவர்கள் இருவருக்கும் 5 நாள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் மேலும் 2 நாட்களுக்கு காவலை நீட்டித்தார். இந்நிலையில், இன்று மாலை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

