கொலிஜியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை வேண்டுமா? தலைமை நீதிபதி சொல்வதென்ன?

கொலிஜியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறுவது சரியாக இருக்காது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி சந்திரசூட்
தலைமை நீதிபதி சந்திரசூட்pt web

இந்திய அரசியல் சாசன பிரிவு 124 உட்பிரிவு மூன்றின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்; ஒரு வாய்ப்பாக ஜனாதிபதியின் கருத்துபடி ஒரு சட்ட வல்லுனர் யாராவது இதில் இருக்கலாம்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நான்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை சரிபார்த்து சட்டத்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும். பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நிரப்பப்படும்.

ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு 2015 ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் 2014ஐ இயற்றியது. இச்சட்டத்தின் படி, நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நபர்கள் போன்றோர் செயல்படுவர். ஆனால், இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இச்சட்டம் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறி அதை ரத்து செய்தது.

இதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே,கவுல், சில தினங்களுக்கு முன்பு, நீதிபதிகளின் நியமனத்தில் கொலிஜியத்தின் முறையில் சிக்கல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற ஒரு கேள்விக்கு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த தலைமை நீதிபதி சந்திரசூட், “கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறுவது சரியாக இருக்காது. வெளிப்படைத்தன்மையோடு இருப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

செயல்முறை ஒன்றை விமர்சிப்பது மிகவும் எளிதானது. ஆனால் அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக நான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நீதிபதி நியமிக்கப்படுவதற்கு முன் சரியான முறையில் கலந்தாலோசிக்கப்படுவதை உறுதி செய்ய எங்கள் நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறார்கள்

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பு நீதித்துறையின் ஒருபகுதியாக 1993 ஆம் ஆண்டில் இருந்து உள்ளது. அதைத்தான் நாங்கள் செயல்படுத்துகிறோம். ஆனாலும், கொலிஜிய அமைப்பின் தற்போதைய உறுப்பினர்களால அதை இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் அதன் நோக்கத்துடனும் பராமரிப்பது நமது கடமை. கொலிஜியத்தின் அனைத்து முடிவுகளும் இணையத்தில் வெளியிடுவதன் மூலம் நாங்கள் எடுக்கும் முடிவுகளை மக்களும் அறிந்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com