மிரட்டிய சீனா.. எல்லையில் அதிரடிக் காட்டிய இந்தியா!
அருணாச்சல பிரதேசத்தில் சீன அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க, இந்தியா 26 புதிய சாலைகள், தொங்கு பாலங்கள் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்கி எல்லை பாதுகாப்பை பலப்படுத்துகிறது. இதன் மூலம் சீனாவின் ஊடுருவல் முயற்சிகளை தடுக்கவும், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
அருணாச்சல பிரதேசத்தை சீனா ‘தெற்கு திபெத்’ எனக் கூறி உரிமை கொண்டாடுகிறது. ஆனால், 1914-ல் வரையறுக்கப்பட்ட மெக்மஹோன் கோட்டை (McMahon Line) எல்லையாகக் கொண்டு, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று இந்தியா திட்டவட்டமாக நிலைநிறுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் சீன இராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகளும், கிராமங்களின் பெயர்களை மாற்றும் உத்திகளும் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இதற்குப் பதிலடியாக, இந்தியா எல்லையின் ‘ஜீரோ லைன்’ வரை சேலா சுரங்கப்பாதை, அதிவேக நெடுஞ்சாலைகள், மற்றும் 24 மணி நேர ட்ரோன் கண்காணிப்பு போன்ற உள்கட்டமைப்புகளைப் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தி வருகிறது. இதன் மூலம் எல்லையில் சீனாவுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக் கோடு வரை சாலைகள், பாலங்கள் மற்றும் அதிநவீன ட்ரோன் கட்டமைப்புகளை இந்தியா அதிவேகமாக உருவாக்கி வருகிறது. இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசம் அடர்ந்த காடுகள், செங்குத்தான மலைகள் மற்றும் ஆழமான ஆற்றுப் பள்ளத்தாக்குகளைக் கொண்டது. வடகிழக்கு எல்லைப் பாதுகாப்பை உறுதிசெய்ய, பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் இந்திய-சீன எல்லைச் சாலைகள் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசத்தில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி 26 புதிய முக்கிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர 33 புதிய தொங்கு பாலங்கள் மற்றும் மரப்பாலங்களை அமைக்க இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படை ஒப்புதல் அளித்துள்ளது. 2005ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம், 2020ஆம் ஆண்டு கல்வான் மோதலுக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக வேகமெடுத்தது. தற்போது மூன்றாம் கட்டப் பணிகள், எல்லையில் இந்தியாவின் நிரந்தர கட்டமைப்பை உறுதிசெய்கின்றன.
படைகளைப் பின்னணியில் நிறுத்திவைப்பதற்குப் பதிலாக, சில நிமிடங்களில் எல்லையை அடையும் வகையில் முகாம்களும் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து கனரக வாகனங்களுக்கான நெடுஞ்சாலைகளையும் சுரங்கப்பாதைகளையும் அமைத்துவருகின்றன.
சீன ராணுவத்துக்கு இணையாக இந்தியா தொழில்நுட்பப் போருக்கும் தயாராகிவருகிறது. கண்ணுக்கு எட்டாத மலை இடுக்குகளைக் கண்காணிக்க தானியங்கி ட்ரோன்கள் மற்றும் எதிரி ட்ரோன்களை முடக்கும் ஜாமர்களை எல்லைக் காவல் படை வாங்கிவருகிறது. இதுமட்டுமின்றி, துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களுக்கு சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் உள்ளூர் மக்கள் இடம்பெயர்வதைத் தடுத்து, அவர்களை ராணுவத்தின் முதல் பாதுகாப்பு அரணாகவும், உள்ளூர் உளவுத் தகவல் கட்டமைப்பாகவும் மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

