வாக்களித்தால் அயோத்திக்கு பயணம்.. மையிட்டுக்கொள்ள மக்கள் எதிர்ப்பு.. சத்தீஸ்கர் தேர்தல் ஒரு பார்வை!

நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், தங்களது வாக்குகளை செலுத்திய பின் விரல்களில் மையிட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
chhattisgarh
chhattisgarhpt web

மத்தியப் பிரதேசத்தில் இருந்து 16 தென்கிழக்கு மாவட்டங்களைப் பிரித்து 2000 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்ட மாநிலம் சத்தீஸ்கர். 16 மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 27 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குபதிவு
சத்தீஸ்கர் முதற்கட்ட வாக்குபதிவுபுதிய தலைமுறை

தோராயமாக 3.15 கோடிமக்கள் தொகை கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் 90 தொகுதிகளை உடையது. 2023 ஆண்டு நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதற்கட்டமான நவம்பர் 7 ஆம் தேதி 20 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடந்தது. நக்ஸலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுப் சந்திர பாண்டே, அருண்கோயல் போன்றோரது திட்டமிடல் காரணமாக மிகப்பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் முதற்கட்ட தேர்தல் நடந்துள்ளது என அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிசோரம், சத்தீஸ்கர்
மிசோரம், சத்தீஸ்கர்முகநூல்

20 தொகுதிகளும் 7 மாவட்டங்களில் பரவி உள்ளன. அதில் 12 தொகுதிகள் பாஸ்தர் பகுதியில் உள்ளது. இப்பகுதிகளை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றே குறிப்பிடுகின்றனர். இதில் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது, இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளில் பாஸ்தர் பகுதிகளில் உள்ள 126 கிராமங்களில் முதல்முறையாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக கருதப்படும் பாகஞ்சூர் பகுதிகளில் இருந்த வாக்குச்சாவடிகள் வானவில் வண்ணங்களில் அமைக்கப்பட்டிருந்தன. காங்கேர் மாவட்டத்தின் ஆட்சியர் பிரியங்கா சுக்லா இதுகுறித்து கூறுகையில், இது போன்ற முயற்சி நாட்டிலேயே முதல் தடவையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த 20 தொகுதிகளில் 198 ஆண் வேட்பாளர்கள், 25பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த வாக்குப்பதிவில் 70.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுக்மா மற்றும் கன்கர் மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்புகள் மற்றும் என்கவுண்டர்களுக்கான செய்திகள் இருந்த போதும் 70.87% என்பது மிகச்சிறப்பான ஒன்றாகவே அதிகாரிகள் கருதுகின்றனர். அதிகபட்சமாக எஸ்டி தொகுதியான பானுபிரதாப்பூர் தொகுதியில் 79.10% குறைந்தபட்சமாக புஜாப்பூர் தொகுதியில் 40.98% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

சுக்மா மாவட்டத்தின் எலமகுண்டா பகுதியில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப்படையின் சிறப்பு பயிற்சி பெற்ற கோப்ரா பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் பதிக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஸ்ரீகாந்த் என்ற ஆய்வாளர் படுகாயமடைந்தார். IED வகை குண்டை பயன்படுத்தி நக்சலைட்டுகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். முன்னதாக, காங்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது. இதில் தேர்தல் பணியாளர்கள் இருவரும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர். நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர் ஒருவரும் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 32% மக்கள் பழங்குடிகளாக உள்ளனர். அதே சமயத்தில் இயற்கை வளம் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாகவும் சத்தீஸ்கர் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த அரவிந்த் நேதம், சர்வ ஆதிவாசி சமாஜத்தின் அரசியல் பிரிவாக ஹமர் ராஜ் கட்சி என்ற ஒன்றை தொடங்கியுள்ளார். நடப்பு தேர்தலில் அக்கட்சி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழங்குடியின மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

அரவிந்த் நேதம்
அரவிந்த் நேதம்

2003 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை மொத்தம் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ததில் பழங்குடியின வாக்குகளுக்கு மிக முக்கிய பங்குள்ளது. இந்த சூழலில் ஹமர் ராஜ் கட்சியும் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் ஹமர் ராஜ் கட்சி 29 எஸ்டி தொகுதிகளிலாவது காங்கிரஸ் வாக்குகளை பெருமளவில் பிரிக்கலாம் என கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் இருப்பினும் துணை முதல்வர் சிங் தியோ முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். காங்கிரஸ் ஒரு குடும்பத்தைப் போல் ஒற்றுமையுடன் உள்ளது என்றும் முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்வில் பூபேஷ் பாகேல் முதலிடத்தில் இருப்பார் என்பதையும் கூறியுள்ளார்.

பூபேஷ் பாகேல்
பூபேஷ் பாகேல்

அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசின் தற்போதைய திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று அறிவித்துள்ளது. அதேபோல், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், கேஜி முதல் பிஜி வரை இலவசக் கல்வி, வண்கர்களிக்கான கடன் தள்ளுபடி, நெல் குவிண்டாலுக்கு 3200க்கு கொள்முதல், விவசாயிகள் கடன் தள்ளுபடி, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வாங்கியுள்ளது.

மறுபுறம், பாஜக சார்பில் மஹாதேவ் செயலி விவகாரம் பெருமளவில் பிரச்சாரங்களில் விமர்சிக்கப்படுகிறது. பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அமித்ஷா, சத்தீஸ்கரில் பாஜக வென்றால் இங்குள்ள ஏழைகளை அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்வதாக அறிவித்திருந்தார். பெண்களுக்கு நிதியுதவி, நெல் குவிண்டாலுக்கு 3100, கேஸ் ஏழைக் குடும்பங்களுக்கு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படுவது போன்ற பல்வேறு வாக்குறுதிகளையும் பாஜக அறிவித்துள்ளது.

ராமன்சிங்
ராமன்சிங்

ஊழல் குற்றச்சாட்டுகளை இரு கட்சிகளும் மாறி மாறி கூறி வருகின்றன. பாஜக முன்னாள் முதல்வர் ராமன்சிங் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை வைத்தால் காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் மீது மஹாதேவ் செயலி குறித்த புகார்களை பாஜக வைக்கிறது.

முதலமைச்சர் பூபேஷ் பாகேல், முன்னாள் முதல்வர் ராமன் சிங் குறித்து கூறும் போது, “அவர் முதலமைச்சராக இருந்த 15 ஆண்டுகளில் எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன. சிட்பண்ட் வழக்கில் அவரது மகன் அபிஷேக் மீது புகார்கள் உள்ளன. அரசின் சேவைகள், திட்டங்கள் எல்லாவற்றிற்கும் கமிஷன் வாங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

மஹாதேவ் சூதாட்ட செயலி இயக்குநரிடம் இருந்து முதல்வர் பூபேஷ் பாகேல் ரூ.508 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை பாஜகவினர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். அமலாக்கத்துறையினரின் விசாரணையில் மஹாதேவ் செயலியின் இயக்குநர், பூபேஷ் பாகேலுக்கு பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதைக் குறிப்பிட்டு பாஜகவினர் காங்கிரஸ் மீதும் பூபேஷ் பாகேல் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தல் நடந்துள்ளது. நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், தங்களது வாக்குகளை செலுத்திய பின் விரல்களில் மையிட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தையும் மீறி 10 கிமீ நடந்து வந்து மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மேலும் சத்தீஸ்கர் தேர்தல் அலுவலகம், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மக்களின் பாதுக்காப்பு கருதி விரல்களில் வைப்பதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

எப்படியாயினும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 70 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நவ்ம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக தொடர்ச்சியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற்றியதன் காரணமாகவும் தற்போது காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் காரணமாகவும் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com