ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்திற்கு உதவிய சென்னை நிறுவனம்!
பால வெற்றிவேல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்திற்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று உதவிக்கரம் நீட்டியுள்ளது. தேசத்தின் பாதுகாப்பிற்கு போர்க்களத்தில் அந்த நிறுவனம் செய்த உதவி என்ன என்பது தொடர்பாக காணலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆபரேஷன் சிந்துரின் மூலம் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு முன்பும், பின்பும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளவற்றுக்கு களத்தில் முன்னணியில் இருந்தது ட்ரோன்கள் தான். இஸ்ரேலிய தயாரிப்பு ட்ரோன்களை இந்திய ராணுவம் அதிகளவில் பயன்படுத்தி வந்தாலும், கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் Zuppa ஜியோ நேவிகேஷன் என்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியதுதான். அஜித் என பெயரிடப்பட்ட இந்த ட்ரோன்கள் எல்லை கண்காணிப்பு, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்த தரவுகளை சேகரிக்கவும், தாக்குதல்களை முன்கூட்டியே அறியவும் பயன்படுத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டு கிண்டியில் தொடங்கப்பட்ட Zuppa ஜியோ நேவிகேஷன் என்ற நிறுவனம், ட்ரோன்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மற்ற ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்கள் மதர் போர்டுகளை வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் சூழலில், Zuppa ஜியோ நேவிகேஷன் நிறுவனம் மட்டுமே ட்ரோன்களுக்கான மதர் போர்டு தயாரிக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறைக்கு அளப்பரிய பங்களிப்பை கொடுத்து வந்த இந்த நிறுவனத்தின் ட்ரோன்கள்தான் ஆபரேஷன் சிந்துூரில் பலவிதமான வியூகங்கள் அமைப்பதற்கு உதவிக்கரமாக இருந்துள்ளன. எல்லையில் இந்திய ராணுவம் கொடுத்த இலக்குகளை திறம்பட செய்து முடித்துள்ள அஜித் ட்ரோன்கள் சிலவற்றை பாகிஸ்தான் அழித்ததும் வேதனை தரும் செய்தி. எனினும், எதிரிகளால் தங்களது தயாரிப்பு ட்ரோன்களை எளிதில் ஹேக் செய்ய முடியாது எனத் தெரிவிக்கிறார், Zuppa ஜியோ நேவிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடேஷ் சாய். ட்ரோன்கள் மட்டுமல்லாது துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் லேசர்கள், வான் தடுப்பு அமைப்புகளுக்கு தேவையான சிறு சிறு உபகரணங்கள், மதர் போர்டு சிப், அதனை இயக்கும் பாதுகாக்கப்பட்ட மென்பொருள் உள்ளிட்டவையும் சென்னையில் உள்ள கிண்டியில்தான் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. உலகத்திலேயே ஏழு நிறுவனங்கள் மட்டுமே ட்ரோன் தயாரிப்பிற்கான காப்புரிமை வைத்துள்ள நிலையில், அதில் இந்தியாவில் காப்புரிமை கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் Zuppa ஜியோ நேவிகேஷன் மட்டுமே. ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் பலவிதமான கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு வருவதாக இந்த நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.