"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" - பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரி விடுத்த எச்சரிக்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" எனவும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவ்வூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்ததைபோல முக்கிய பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரையும் இஸ்லாமாபாத் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர், நடவடிக்கை ஆரம்பத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டது என்றும், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இது தூண்டப்பட்டதாக அவர் கூறினார்.
"இந்தியாவின் நடவடிக்கை பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புக்கு எதிரானது” என கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் நீடிக்குமா? என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், " "ஆபரேஷன் சிந்தூர்" இடைநிறுத்தப்பட்டுள்ளது, முடிவடையவில்லை" என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும், பயங்கரவாதிகளைக் அழிக்க வேண்டும், அவர்களின் உள்கட்டமைப்பை தகர்க்க வேண்டும். எனவே ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.