"400+ இடங்களில் வென்றால் அரசியலமைப்பை மாற்றுவோம்" - பாஜக எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அனந்த குமார் ஹெக்டேவின் அரசியல் விவாதத்தில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
anantkumar hegde, rahul gandhi
anantkumar hegde, rahul gandhipt web

மார்ச் 9 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டம், சித்தாபுராவில் உள்ள ஹலகேரி எனும் கிராமத்தில் பேசிய அனந்த் குமார் ஹெக்டே, ”இந்து மதத்தைக் காப்பாற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 400 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வென்றால் மட்டுமே அதற்கு ஒரே வழி” என தெரிவித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடம் அவர் கூறியதாவது, “வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். அரசியல் அமைப்பில் தேவையற்ற விஷயங்களை வலுக்கட்டாயமாக திணித்து குறிப்பாக இந்து சமுதாயத்தை ஒடுக்கும் நோக்கத்தில் சட்டங்களைக் கொண்டுவந்து, அரசியலமைப்பை காங்கிரஸ் சிதைத்தது. இந்து மதத்தை முன்னிறுத்தாத வகையில் அரசியல் சட்டங்களில் மாற்றங்களைச் செய்தனர்.

இதையெல்லாம் மாற்றி மதத்தைக் காப்பாற்ற வேண்டும். மக்களவையில் ஏற்கனவே 3ல் 2 பங்கு பெரும்பான்மை உள்ளது. அதேவேளையில் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லை. மக்களவை, மாநிலங்களவை ஏன் மாநிலங்களில் கூட கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். 400க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். கட்சி 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை வென்றால், மாநில அரசுகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவோம்.

குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும் முயற்சியுடன் திருத்தப்பட்டாலும், பல மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளிக்காததால் இதை செயல்படுத்த முடியவில்லை” என தெரிவித்துள்ளார். எம்.பி. அனந்த குமார் ஹெக்டேவின் கருத்துக்கு பல மட்டங்களில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

ராகுல்காந்தி இதுகுறித்து கூறுகையில், “அரசியலமைப்பை மாற்ற 400 இடங்கள் வேண்டும் என்ற பாஜக எம்பியின் கருத்து, நரேந்திர மோடி மற்றும் அவரது சங் பரிவாரத்தின் மறைக்கப்பட்ட நோக்கங்களை பகிரங்கமாக அறிவிப்பதாகும்.

rahul gandhi
rahul gandhipt web

பாபாசாகேப்பின் அரசியலமைப்பை அழிப்பதே நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு. அவர்கள் நீதி சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளை வெறுக்கிறார்கள். சமூகத்தை பிளவுபடுத்துவதன் மூலமும், ஊடகங்களை அடிமைப்படுத்துவதன் மூலமும், கருத்து சுதந்திரத்தை முடக்குவதன் மூலமும் சுதந்திர அமைப்புகளை முடக்குவதன் மூலமும் எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார்கள். இந்த சதிகள் எதுவும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம். கடைசி மூச்சு இருக்கும் வரை ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து கூறுகையில், “அரசியலமைப்பை திருத்தும் பாஜகவின் எண்ணம் ரகசியமாக இருந்ததில்லை. டஜன் கணக்கான பாஜக தலைவர்கள் தனிப்பட்ட உரையாடல்களில், இந்தியா ஒரு இந்து ராஷ்டிராவாக இருக்க வேண்டும் என்றும், இந்தி இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளை விட மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பாஜக ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலின்படி அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால், அது பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சிறும்பான்மையினர் உரிமைகள் போன்றவற்றிற்கு அது முடிவாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

எம்.பி. அனந்த குமார் கருத்து குறித்து பாஜக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு குறித்த எம்.பி. அனந்த குமார் ஹெக்டேயின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கவில்லை. பாஜக, நாட்டின் அரசியலமைப்பை நிலைநிறுத்தவதற்கான தன்னுடைய உறுதியை உறுதிப்படுத்துகிறது. ஹெக்டேவின் கருத்துக்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com