சத்தீஸ்கர் | அமிலவீச்சில் கண்களை இழந்த மாணவி.. பொதுத்தேர்வில் 95.6% பெற்று அசத்தல்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அமில வீச்சால் பார்க்கும் திறனை இழந்த கஃபி என்னும் மாணவி சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கஃபிக்கு மூன்று வயதான போது ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் பக்கத்து வீட்டுக்காரர், கஃபி மீது அமிலம் வீசினார். இதனால் கஃபி தனது பார்க்கும் திறனை முழுமையாக இழந்தார்.
கஃபியின் தந்தை பவன், ஹரியானாவின் தலைமைச் செயலகத்தில் பியூனாக பணியாற்றி வருகிறார். தாயார் சுமன். இவர்கள் இருவரும் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். கஃபி சத்தீஸ்கரில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்தார். அவரது 10 வயதில், கஃபி 2ஆம் வகுப்பில் இருந்து 6ஆம் வகுப்பிற்கு நேரடியாக சென்றார். கஃபி தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் கஃபி 95.6 சதவீதம் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து கஃபி பேசியதாவது, “முதலில் எனக்கு படிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. நான் தொடர்ந்து படித்தேன். பிறகு அது எளிதாகிவிட்டது. மாவட்ட ஆட்சியர் ஆகவேண்டும் என்பதே எனது கனவு. அதற்காக தினமும் 2 முதல் 3 மணி நேரம் வரை படிக்கிறேன். நான் கடினமாக படிக்கிறேன். அப்போதுதான் ஒருநாள் எனது வழக்கில் என்னால் நீதியை பெறமுடியும். நான் தொடர்ந்து போராடுவேன்” எனக் கூறினார்.
சத்தீஸ்கரில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.6 சதவீதம் பெற்று கஃபி முதலிடமும், 94 சதவிதம் பெற்று சுமண்ட் போட்டர் இரண்டாவது இடமும் மற்றும் 93.6 சதவீதம் பெற்று குர்சரண் சிங் மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். அதேபோல், 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சன்னி குமார் சச்சன் 86.2 சதவீதமும், சன்ஸ்க்ரிடி சர்மா 82.6 சதவீதமும் பெற்று முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று அசத்தியுள்ளனர். இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.