'வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை' கிளம்பிய எதிர்ப்பு.. நாராயணமூர்த்திக்கு ஆதரவாக களமிறங்கிய CEOக்கள்!

2016 ஆம் ஆண்டில் மட்டும் நீண்ட வேலை நேரங்கள் காரணமாக 7,45,000 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2000 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 29% அதிகம்
நாராயணமூர்த்தி
நாராயணமூர்த்திpt web

infosys நாராயண மூர்த்தி 3one4 capital யூ டியூப் தளத்தில் the record எனும் நிகழ்ச்சியில் நடந்த ”leadership by example” எனும் பாட்காஸ்டில் உரையாற்றினார். அவரை டி.வி.மோகந்தாஸ் பை (t.v.mohandas pai) நேர்காணல் செய்தார். அப்போது பேசிய நாராயண மூர்த்தி,

"உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரை,

ஊழலை குறைக்காத வரை,

அதிகார மையத்தில் ஏற்படுகிற தாமதத்தை குறைக்காத வரை

வளர்ந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. வாரத்திற்கு இளைஞர்கள் 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜப்பான், ஜெர்மனியில் இதுதான் நடந்தது. குறிப்பிட்ட ஆண்டுகாலம் அனைத்து ஜெர்மனி மக்களும் கூடுதலாக வேலை செய்தார்கள்.

நாராயணமூர்த்தி
நாராயணமூர்த்தி

நாம் கடினமாக உழைத்தால்தான் பொருளாதார ரீதியாக நம் நாடு வளர்ச்சி அடையும். அதனால் இளைஞர்கள் அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு உழைக்க வேண்டும். அப்போது தான் gdp யில் முதல் அல்லது இரண்டாவது இடத்திற்கு இந்தியா போகும்" என தெரிவித்திருந்தார்.

இணையத்தில் எழுந்த எதிர்ப்பு

நாராயணமூர்த்தியின் இந்த கருத்து பெரும் விவாதித்தினை ஏற்படுத்தியது. இதற்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தும் இணையத்தில் பலரும் தங்களது கருத்தினை பதிவு செய்திருந்தனர். குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டாம் என சொல்கிறாரா? பணி செய்யும் இடங்களில் இருந்து பெண்களை வெளியேற்ற பார்க்கிறாரா? என பலர் கேள்விகளை எழுப்பி இருந்தனர். இது உழைப்பு சுரண்டலுக்குதான் வலி வகுக்கும் என்றும் கூறியிருந்தனர். அதே நேரத்தில் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவான கருத்துகளையும் பார்க்க முடிந்தது.

CEOகளின் ஆதரவு

பல்வேறு நிறுவனங்களின் CEOகள் நாராயணமூர்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

சசிசேகர் வெம்பதி, பிரசார் பாரதி நிறுவனத்தின் முன்னாள் CEO

சசிசேகர் வெம்பதி தான் இன்போஸிஸ் நிறுவனத்தில் இருந்த காலத்தை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "பெரும் உற்சாகத்தோடு நாங்கள் கூடுதலான மணிநேரங்களை செலவளித்ததை நான் நினைவில் கொள்கிறேன். ஏனெனில் அது வேலைக்காக மட்டும் அல்ல. இந்திய ஐடி நிறுனவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக மாறியுள்ளதால் நாங்கள் வரலாற்றை உருவாக்குக்கிறோம்.

சசிசேகர்  வெம்பதி
சசிசேகர் வெம்பதி

நீங்கள் பெரிய குறிக்கோளை உருவாக்கி அதை நம்பும் போது அது இயல்பில் நிகழ்கிறது. அங்கு மணி நேரங்களின் எண்ணிக்கை இரண்டாம் பட்சமாகிறது. மூர்த்தியின் கருத்துக்களை இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பாவிஷ் அகர்வால்
பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால், OLA CEO

"குறைவாக வேலை செய்து நம்மை மகிழ்ச்சியோடு வைத்திருப்பதற்கான தருணம் அல்ல இது. மாறாக, மற்ற நாடுகள் பல தலைமுறைகளாகக் கட்டியெழுப்பியதை ஒரே தலைமுறையாகக் கட்டமைக்க வேண்டிய தருணம் இது!” என பாவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.

சஜின் ஜிண்டால், JSW நிறுவனத்தின் சேர்மேன்!

"இது அர்ப்பணிப்பு பற்றியது. நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற வேண்டும்" என சஜின் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

சஜின் ஜிண்டால்
சஜின் ஜிண்டால்

குர்னானி, Tech மஹிந்திரா CEO

மூர்த்தி கூறியது நிறுவனத்திற்கு மட்டும் என நான் நம்பவில்லை. அது உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் பொருந்தும். அவர் நிறுவனத்திற்காக 7 மணி நேரம் வேலை செயுங்கள் என சொல்லவில்லை. 40 மணி நேரம் நிறுவனத்திற்காக வேலை செய்யுங்கள். 30 மணி நேரம் உங்களுக்காக வேலை செய்யுங்கள். 10 ஆயிரம் மணி நேரம் ஒரு துறையில் நீங்கள் செலவழித்தால் அதில் நீங்கள் மாஸ்டர் ஆகலாம். உங்களுக்கான துறையில் நீங்கள் வல்லுநர் ஆகுங்கள்" என குர்னானி தெரிவித்துள்ளார்.

குர்னானி
குர்னானி

மோகன்தாஸ், இன்போசிஸ் முன்னாள் அதிகாரி

இன்போசிஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவரும் நேர்காணல் செய்தவருமான மோகன்தாஸ் Manipal Global Educationன் தற்போதைய தலைவராவார். இவர் தனது எக்ஸ் தளத்தில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான தரவுகளை பகிர்ந்துள்ளார். இந்தியாவில் வாரத்திற்கான சராசரி வேலை நேரம் 61.6 மணி நேரங்கள். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். மூர்த்தியின் அறிவுரை, 30 வயதுக்கு உட்பட்ட இளைஞ்சர்களுக்கானது. செழிப்பான வாழ்க்கைக்கு கடின உழைப்பு தேவை. தரவு காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.

சீனாவில் எழுந்த எதிர்ப்பு

சீனாவில் 996 வேலை திட்டம் சில நிறுவனங்களில் பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்திற்கு 6 நாள் வேலை செய்வதுதான் 996 திட்டம். மொத்தத்தில் வாரத்திற்கு 72 மணி நேரம் உழைக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்களும் நடந்துள்ளது. அம்மக்கள் அதை நவீன அடிமைத்தனம் என்கின்றனர்.

CEOகளின் வேலை நேரம்

மறுபுறம் சில மக்கள் CEO க்களின் வேலை நேரத்தை குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறனர். yahoo முன்னாள் CEO மேரிசா மேயர் வாரத்திற்கு130 மணி நேரம் உழைத்தார். எலன் மஸ்க் வாரத்திற்கு 120 மணி நேரம் உழைத்தார். whole food marker நிறுவனத்தின் முன்னாள் CEO ஜான் மேக்கி 80 மணி நேரம் உழைத்தார் என குறிப்பிட்டு வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பேராசிரியர்களான மைக்கேல் போர்ட்டர் மற்றும் நிதின் நோஹ்ரியா CEOக்களின் வேலை நேரம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். சராசரியாக $13.1 பில்லியன் ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களின் 27 CEOக்கள் (இரண்டு பெண்கள் மற்றும் 25 ஆண்கள் மட்டுமே) தங்கள் நாட்களை எவ்வாறு செலவழிக்கின்றனர் என்பது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களது ஆய்வின் படி சராசரியாக, CEOக்கள் வாரத்திற்கு 62.5 மணி நேரங்கள் வேலை செய்கின்றனர். CEOக்களின் பணி சாதாரண ஊழியர்களின் வேலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதும் கூட. அவர்களின் வேலையில் 25 சதவிகிதம் மக்களைக் (ஊழியர்கள், பிற நிறுவனங்களின் அதிகாரிகள்) காண்பதும் அவர்களிடம் உரையாடுவதிலும், 25 சதவிகிதம் செயல்பாட்டு மற்றும் வணிக அலகு மதிப்பாய்வுகளுக்காகவும் (functional and business unit reviews) , 16 சதவிகிதம் அமைப்பு மற்றும் கலாச்சாரத்திற்காகவும் (organization and culture), 21 சதவிகிதம் மூலோபாயத்திற்காகவும் (strategy) செலவிடப்படுகிறது. அவர்களின் வேலையில் 3 சதவீதம் மட்டுமே தொழில் வளர்ச்சிக்காகவும், 1 சதவீதம் நெருக்கடி மேலாண்மைக்காகவும் (crisis management) செலவிடப்படுகிறது.

business plan
business planweb

இதற்கிடையில், அவர்களின் வேலையில் 4 சதவீதம் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களிலும் (mergers and acquisitions), 4 சதவீதம் செயல்பாட்டுத் திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. CEOக்களின் பெரும்பான்மையான நேரம் மீட்டிங்களில் செலவாகும் என்பது தெளிவாகும். மேலும் அவர்களது திட்டங்கள் பெரும்பாலும் முன்பே திட்டமிடப்படுகிறது. அவர்கள் பயணங்களில் தங்களது பெரும்பாலான நேரங்களை செலவழிக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

ஜெர்மனி, ஜப்பானோடு ஒப்பிடுவது சரியா?

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறியது போல் போருக்குப் பிந்தைய ஜெர்மனி மற்றும் ஜப்பானோடு ஒப்பிடுவது தவறாக வழி நடத்தக்கூடியது என்றும் சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அந்த நாடுகளில் தொழிலாளர் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் உள்ளது. எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கான தங்களது முக்கிய பிரச்சனையாக வேலையில்லாத் திண்டாட்டத்தையே கையிலெடுத்துள்ளன.

அதோடு மட்டுமல்லாமல் நிரந்த தொழிலாளர்களாக இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பல நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது இது போன்ற திட்டம் மேலும் சிக்கலுக்கே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர். இது போன்ற திட்டம் வரும்போது வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான வாய்ப்பு மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் தாண்டி தொழிலாளிகளின் தனிப்பட்ட வாழ்வு பெரும்பான்மையாக பாதிக்கப்படும் என கூறுகின்றனர்.

உற்பத்தித் துறையில் ஏற்படும் ஒழுங்கின்மையைக் குறைப்பதற்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமே ஒழிய இதுபோன்ற திட்டம் தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் என தெரிக்கின்றனர். வேலையில் அதிகமானோர் ஈடுபடும் போது வேலை செய்ய வேண்டிய நேரம் குறையும். அதேசமயத்தில் வளர்ச்சியும் ஏற்படும் என்கின்றனர்.

மருத்துவர்கள் கூறுவதென்ன?

இதய நோய் நிபுணரான தீபக் கிருஷ்ணமூர்த்தி, “நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்தால் தூக்கத்திற்கு 8 மணி நேரம் அவசியம். மீதமிருப்பது 4 மணி நேரம். பெருநகரங்களில் பயணத்திற்கு 2 மணி நேரம் ஆகும். மீதம் 2 மணி நேரம் அன்றாட பணிகளுக்கு தேவை. இப்படி இருந்தால் உடற்பயிற்சி, குடும்படுத்தோடு செலவிடும் நேரம், பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு நேரம் இருக்காது. இதில் மெயில்களுக்கும் ஊழியர்கள் பதிலளிக்க வேண்டும். இது தொடர்ந்தால் இளம் வயதிலேயே இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு
மாரடைப்புமுகநூல்

வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் வேலை செய்பவர்களை விட 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர்களில் 17 சதவீதமானோர் இதய நோய்களால் உயிரிழப்பதாகவும் 35 சதவீதமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் மட்டும் நீண்ட வேலை நேரங்கள் காரணமாக 745 000 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2000 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 29% அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com