மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு!
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% அதிகரிக்க ஒப்புதல் தரப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கபட உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, இந்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்பட்டு இத்தொகை வழங்கப்படும் என்றும் இதனால் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பலனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகவிலைப்படி வீதம் 53% ஆக உள்ள நிலையில் அது 55% ஆக உயர உள்ளது.
அகவிலைப்படி உயர்வால் 6 , 614 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 48 லட்சத்து 66 ஆயிரம் மத்திய அரசு பணியாளர்களும் 66 லட்சத்து 55 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் அரசின் முடிவால் பலன் பெறுவார்கள். பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் வகை உரங்கள் குறைந்த விலைக்கு மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வகையில் 37 ஆயிரத்து 216 கோடி ரூபாய் மானியத்தை வரும் நிதியாண்டில் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. செமிகண்டக்டர் அல்லாத மின்னணு சாதன உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 22 ஆயிரத்து 919 கோடி ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.