உலகின் பணக்காரர் பட்டியல் | 5வது இடத்தை பிடித்த முதல் இந்திய பெண்.. HCL ரோஷ்னி நாடார்!
ஹுருன் குளோபல் என்ற அமைப்பு, 2025ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார பெண்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த HCL டெக்னாலஜிஸின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். 40 பில்லியன் டாலர் (ரூ.3.5 லட்சம் கோடி) மதிப்புடன் அவர் உலகின் 5வது பணக்கார பெண்ணாக இருக்கிறார். இதன்மூலம் உலகின் பெரும் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவில் முன்னணியில் உள்ள ஐடி நிறுவனங்களில் ஹெச்.சி.எல்லும் ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சர்வதேச அளவிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஷிவ் நாடார், HCL டெக்னாலஜிஸில் தனக்கு இருந்த 47% பங்குகளைச் சமீபத்தில்தான் ரோஷினி நாடாரின் பெயருக்கு மாற்றினார். அதன்மூலமே டாப் 10 பட்டியலில் ரோஷினி நாடார் நுழைந்துள்ளார்.
ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025இன் படி, இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நபராக அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. எனினும், அவர் இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவே உள்ளார். ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம், உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். இருப்பினும், அம்பானி ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். மேலும் இந்த பணக்கார பட்டியலில் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திலீப் சங்க்வி ரூ.2.5 லட்சம் கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் நான்காவது பணக்காரராகவும், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ரூ.2.2 லட்சம் கோடி நிகர மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.