நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலுக்கு அவரது சகோதரி ரக்ஷா பந்தன் தினத்தில் கண்ணீருடன் ராக்கி கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருவூரு பகுதியை சேர்ந்த இளைஞர் வினோத் (22). டிப்ளோமா படித்துக்கொண்டிருந்த வினோத், கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாட தனது நண்பர்களுடன் பெத்தபல்லி ஏரிக்கு சென்றுள்ளார். நண்பர்களுடன் ஏரியில் குளித்துக்கொண்டிருந்த அவர், திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் 12 மணிநேரம் போராடி இளைஞரின் உடலை குளத்தில் இருந்து மீட்டனர்
இந்நிலையில் தனது அண்ணனின் உடலைப் பார்த்து அவரது தங்கை கதறி அழுதார். தனது அண்ணனுடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டிய ரக்ஷா பந்தன் தினத்தை, தனது உயிரற்ற அண்ணனின் கையில் ராக்கி கயிறை கட்டி தனது பாசத்தை வெளிப்படுத்தினார். இதனை கண்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் பொங்கியது.