ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் மாயமான வீடியோ காட்சிகள்... என்ன சொல்கிறது ஆம் ஆத்மி கட்சி?

முதல்வர் இல்லத்தில் இருந்த சிசிடிவி தரவுகள் மாயமானது எப்படி என கேள்வி எழுப்பி, குற்றத்தை மறைக்கபதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஸ்வாதி மலிவால்.
ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்ஃபேஸ்புக்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையில் காணொளிகள் முக்கியமான பங்குவகித்து வருகின்றன.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரான பிபவ் குமார் கடுமையாக தாக்கியதாக ஸ்வாதி மலிவால் புகார் அளித்துள்ள நிலையில், முதல்வர் இல்லத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மாயமாகிவிட்டதாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவான பிறகு நடைபெற்ற விசாரணையில், டெல்லி காவல்துறை முதல்வர் இல்ல சிசிடிவி காட்சிகளை கேட்டபோது, தரவுகளை பதிவு செய்யும் சிறிய "டிரைவ்" ஒன்று அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் எந்தப் பதிவும் இல்லை என நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஐபோன் காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் உள்ள தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ஐபோன் கடவுச்சொல்லை அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் இல்லத்தில் சிசிடிவி தரவுகள் மாயமானது எப்படி என கேள்வி எழுப்பி, குற்றத்தை மறைக்க பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ஸ்வாதி மலிவால்.

ஆம் ஆத்மி கட்சி தரப்பு வாதம்

முன்னதாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட காணொளியில் ஸ்வாதி மலிவால், முதல்வர் இல்லத்தில் அமர்ந்துள்ளது மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் உள்ளன.

ஸ்வாதி மலிவால் கடுமையாக தாக்கப்பட்டார் என்றால் எப்படி அவர் பாதுகாப்பு பணியாளர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார் என ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்வாதி மலிவால் பொய் குற்றச்சாட்டுகளை பிபவ் மீது சுமத்தியுள்ளார் என்பது அவர்களது வாதம்.

ஸ்வாதி மலிவாலின் கேள்வி

முழு காணொளியை வெளியிடாமல் 50 நொடிகள் பதிவை மட்டும் ஆம் ஆத்மி கட்சி வெளியிடுவது ஏன் என ஸ்வாதி மலிவால் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். காணொளி எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் பிபவ் குமாரை காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

காவல்துறைக்கு ஸ்வாதி மலிவால் அளித்துள்ள புகாரில் முதல்வர் இல்லத்தில் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், பிபவ் குமர் தாக்குதலால் தனக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோதும், நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் அளிக்க சென்ற போதும், சாதாரணமாக நடக்கக்கூட முடியாமல் மெதுவாக நடந்து சென்றார். மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மாலிவால் தாக்குதல்|FIRல் 8 முறை கன்னத்தில் அறை.. தலைமறைவான PA.. வலைவீசும் போலீஸ்!

இந்நிலையில் முதல்வர் இல்ல நுழைவாயிலில் ஸ்வாதி மலிவால் நடந்து செல்வது போன்ற காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் வலுக்கட்டாயமாக ஸ்வாதி மலிவாலை முதல்வர் இல்லத்திலிருந்து வெளியே அழைத்து வருவது மற்றும் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

"முதல்வர் இல்லத்திலிருந்து சாதாரணமாக நடந்து சென்றார். பின்னர் மருத்துவமனை சென்றபோது நடக்க முடியாததுபோல் பாவனை செய்துள்ளார்" என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள பிபவ் குமார் தன்னை கடுமையாக தாக்கிய பிறகு, தான் தப்பி வெளியே சென்று காவல்துறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்த நேரத்தில் அந்த காணொளியை மட்டும் பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளார்கள் எனவும், பிபவ் குமார் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட காட்சிகள் எங்கே எனவும் கேள்வி எழுப்பி உள்ளார் ஸ்வாதி மலிவால்.

இத்தகைய குழப்பங்களுக்கிடையே முதல்வர் இல்ல சிசிடிவி காட்சிகள் மூலம் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிபவ் குமார் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது அரசு தரப்பு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா ஆதாரங்களை முதல்வர் இல்லத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால் புகார் : கைது செய்யப்பட்ட பிபவ் குமார்! 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

காணொளி வெளியீடுகள் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் காரணமாக குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. பிபவ் குமார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளார் எனவும் வழக்கின் விசாரணை தொடரும் நிலையில் காணொளி தரவுகள் மாயமானது தொடர்பாகவும் விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com