முதல்முறையாக அனில் அம்பானி மகன் மீது கிரிமினல் வழக்கு.. அதிரடியில் இறங்கிய சிபிஐ!
வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. அனில் அம்பானியின் மகன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) உடன் தொடர்புடைய வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. ஜெய் அன்மோல் மீது கிரிமினல் வழக்குப் பதியப்படுவது இதுவே முதல் முறையாகும். சிபிஐக்கு அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரில், கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துவதில் முறைகேடுகள் மூலம் ஜெய் அன்மோல் நிதி இழப்பை ஏற்படுத்திய செயல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இத்தகைய செயல்களில் அவர் ஈடுபட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் மோசடி காரணமாக, சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.228.06 கோடி இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தவிர இந்த வழக்கில் RHFL, அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட பல பொது ஊழியர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ, விரைவில் விசாரணையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக அனில் அம்பானி குழுமம் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

