விஜயிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகள்.. விசாரணை நீடிக்க வாய்ப்பு.. குற்றப்பத்திரிகையிலும் பெயர்?
டெல்லியில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், 2ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டிருந்தது. ஏற்கெனவே, ஜனவரி 12ஆம் தேதி, விஜய் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகியிருந்த நிலையில், அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான 2ஆவது நாள் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம், சிபிஐ அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம், ‘பரப்புரைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நேரம் என்ன?
தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன?
கூட்டம் அதிகமிருக்கிறது.. தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.. தண்ணீர் வசதி இல்லை.. இதுபோன்ற விபரங்கள் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?
அப்படி தெரிந்திருந்தும், நீங்கள் பரப்புரையை தொடர்ந்தீர்களா?
கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் உங்கள் பேரணியை நிறுத்தியிருக்கலாமே? ஏன் நிறுத்தவில்லை?
தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டது ஏன்?
எப்போதுதான் கூட்ட நெரிசலை உணர்ந்தீர்கள்’ என சிபிஐ தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்யப்போகும் குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜயின் பெயரும் சேர்க்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜயிடம் விசாரணை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

