முற்றும் விவகாரம்.. தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியுமா.. சட்டம் சொல்வது என்ன?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு, இரண்டு தேர்தல் ஆணையர்களே எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.
இந்திய அரசமைப்பு பிரிவு 324 உட்பிரிவு 5இன்படி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான பணிப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்குப் பின்பற்றும் அதே பதவி நீக்கத் தீர்மான நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும். அரசமைப்பு பிரிவு 124 உட்பிரிவு 4இன்கீழ் நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை, பணிபுரிய இயலாமை ஆகியவற்றின் பேரில் மட்டுமே தீர்மானம் கொண்டுவர முடியும். அப்படி நாடாளுமன்ற மக்களவையில் தீர்மானத்தைக் கொண்டுவர குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் கையெழுத்தும், மாநிலங்களவையில் கொண்டுவர குறைந்தபட்சம் 50 எம்பிக்களின் கையெழுத்தும் கட்டாயமாகும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களும் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து, தீர்மானத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ முழு அதிகாரம் பெற்றவர்கள். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அவரது ஒப்புதலுக்குப் பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்படுவார். அரசமைப்பு அமைப்புகளின் சுதந்திரத்தையும் நடுநிலைமையையும் காக்கவே பதவி நீக்க நடைமுறை மிகவும் கடினமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

