முன்னணியில் பிஆர்எஸ்; முட்டி மோதும் காங்கிரஸ்; கோட்டுக்கு அந்தப்பக்கம் பாஜக- தெலங்கானா தேர்தல் களம்!

ஐந்து மாநில தேர்தல் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
தெலங்கானா தேர்தல்
தெலங்கானா தேர்தல்pt web

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்

மொத்தமுள்ள 119 தொகுதிகளில் ஒரேகட்டமாக நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 19 தொகுதிகள் எஸ்.சி. தொகுதிகளாகவும், 12 தொகுதிகள் எஸ்.டி. தொகுதிகளாகவும் உள்ளது. பெரும்பான்மை கொண்டு ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் கே.சந்திரசேகரராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி என இரு கூட்டணிகளிலும் இணையப்போவதில்லை என அறிவித்துள்ளதால் தெலுங்கானாவில் பிஆர் எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டியாக பார்க்கப்படுகிறது.

வாக்காளர்கள் விவரம்

தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ளனர். 2068 ஆண் வேட்பாளார்களும், 221 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ஒருங்கிணைந்த ஆந்திரா to தெலங்கனா!

ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது மாநிலத்தில் கங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. மாநிலம் பிரிவதற்கு முன் 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் 156 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 92 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 10 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தெலுங்கானா என்ற மாநிலம் உருவான பின் தெலுங்கு தேசம் என்ற கட்சி தெலுங்கானாவில் மெல்ல தனது இடத்தைக் காலி செய்து கொண்டது. பிரிக்கப்பட்ட ஆந்திராவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது தெலுங்கு தேசம்.

ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் மிகச்சிறிய கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தற்போது தெலங்கானா மாநிலத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தனிமாநில கோரிக்கையை தனது அடிப்படையாக கொண்டு 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் நடந்த தேர்தலில், 2004 ஆம் ஆண்டு 26 தொகுதிகளிலும், 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 4% ஆக இருந்தது. ஆனால் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் அரசாக அக்கட்சி உள்ளது.

கடந்த தேர்தல்கள் - 2014

தனிமாநிலமாக உருவெடுத்த பின் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அக்கட்சியின் வாக்கு சதவீதமோ 34.3. ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தெலங்கானாவில் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதமோ 25.2% ஆக குறைந்தது. அசாதுதீன் ஓவைசியின் AIMIM 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

கடந்த தேர்தல்கள் - 2018

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மொத்தம் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. டிஆர்எஸ் 46.8% வாக்குகளையும், காங்கிரஸ் 28.4% வாக்குகளையும் பெற்றிருந்தது. அசாதுதீன் ஓவைசியின் AIMIM 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி இரு தொகுதிகளிலும், பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றிருந்தது.

2018 ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்குதேசம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி போன்ற கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பெரும்பான்மையாக வென்று ஆட்சியை அமைத்தது. அந்தாண்டு நடந்த தேர்தலில் 16 வேட்பாளர்கள் 5000 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர். டிஆர்எஸ் வேட்பாளர்கள் 10 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும் இதில் அடக்கம்.

சிறும்பான்மையின மக்களது வாக்குகள்!

தற்போது நடக்கும் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் ஏறத்தாழ 40 தொகுதிகளில் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. இப்பகுதிகளில் கடந்த 2 தேர்தல்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் அந்த வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதேசமயத்தில் 19 எஸ்சி, 12 எஸ்டி தொகுதிகளில் தற்போது டிஆர்எஸ் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 19 எஸ் சி தொகுதிகளில் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி மற்றும் டிஆர்எஸ் தலா 2 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. தனிமாநிலமாக உருவெடுத்த பின் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டிஆர்எஸ் 13 எஸ்சி தொகுதிகளிலும் 5 எஸ்டி தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுமுனையில் காங்கிரஸ் 4 எஸ்சி மற்றும் 2எஸ்டி தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டிஆர்எஸ் 16 எஸ்சி தொகுதிகளிலும் 5எஸ்டி தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2எஸ்சி தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 5 எஸ்டி தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

தற்போதைய தேர்தலில் சிறும்பான்மையின மக்களது வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பும் என காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர். இதன் காரணமாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சிறும்பான்மை மக்களை காங்கிரஸ் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் பிஆர்எஸ் கட்சியினர் காங்கிரஸ் மீது சுமத்துகின்றனர்.

பாரத் ராஷ்ட்ரிய சமிதி!

ஆந்திராவின் பகுதியாக இருந்த போது பின் தங்கிய நிலையில் இருந்த தெலுங்கானா, முதல்வராக கே.சி.ஆர் பொறுப்பேற்ற பின் பல வகைகளில் மாற்றம் கண்டு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. விவசாயம் அதிகளவில் நடக்கும் மாநிலம் என்பதால் நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டங்கள் போன்றவை மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ரைத்து பந்து, தலித் பந்து, வீடற்றவற்களுக்கு 2 பிஹெச்கே வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் போன்றவை அவரது அரசின் பாசிட்டிவ்களாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் வாரிசு அரசியல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாதது, கல்வித்துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாதது, கல்வித்துறையில் தனியாரை ஊக்குவிப்பது போன்ற சில பிரச்சனைகளும் உள்ளன.

முதல்வர் கேசிஆரை எதிர்க்க பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளும் ஊழல் புகார்களை முன்வைக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் கேசிஆர் மாநிலத்தை கொள்ளை அடித்ததற்காக ஜெயிலில் அவருக்கு 2 பெட்ரூம்களை கொண்ட வீடு உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். மறுபுறம் பாஜகவோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேசிஆர் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

பிஆர்எஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அதில், அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் கட்டடங்கள் கட்டித்தருவது, தகுதியுள்ள பெண்களுக்கு 400 ரூபாயில் மானியத்துடன் சிலிண்டர் வழங்கப்படுவது,

சௌபாக்கிய லட்சுமி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் வாங்குவது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் முதியவர்களுக்கான உதவித்தொகை 3016 ஆக உயர்த்தி வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா காங்கிரஸ்!

ஒருங்கிணைந்த ஆந்திராவில் மிகப்பரும் கட்சியாக இருந்த காங்கிரஸ், ஆந்திரா மற்றும் தெலங்கானா என பிரிக்கப்பட்ட போது அடையாளம் தெரியாமல் போனது என்று தான் சொல்ல வேண்டும். தெலங்கானாவில் கேசிஆர் தனது இடத்தை பிடித்துக்கொள்ள ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி YSRC ஆரம்பித்தபோது ஆந்திராவிலும் அடிவாங்கியது காங்கிரஸ். ஆனால் தெலங்கானாவில் தற்போது சூழல் மாறியுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ யாத்திரை, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி போன்றவை அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதிலும் கட்சியின் மாநில தலைவராக ரேவந்த் ரெட்டி மாறியதில் இருந்து கட்சியின் செயல்பாடுகளில் பெரிதும் மாற்றம் நிகழந்துள்ளது.

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களின் தொடர்பிரச்சாரம் போன்றவற்றின் மூலம் காங்கிரஸ் இந்த தேர்தலில் பிஆர்எஸ் கட்சிக்கு இணையாக களத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் அந்த கட்சி 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்குவது, கேஸ் சிலிண்டர்களை 500 ரூபாய்க்கு வழங்குவது, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், தகுதியுள்ள குடும்பத்தினருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், முதியோர் உதவித்தொகை 4 ஆயிரம் ஆக அதிகரிப்பது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா பாஜக

தெலுங்கானா பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 111 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 8 தொகுதிகளை கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அம்மாநிலத்தில் தேர்தலுக்கு முன்னால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் படி பாஜகவின்20 வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், 7 தொகுதிகளில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கடுமையான போட்டியாக இருப்பார்கள் என தெரியவந்துள்ளதாக கிரேட்ஆந்திரா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் எனும் பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என தெலங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வருடத்திற்கு 4 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தெலங்கானாவில் காங்கிரஸின் வளர்ச்சியின் காரணமாக நடக்கும் தேர்தல் என்பது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்றும் பாஜக இந்த வட்டத்தில் இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்குமென்றும், காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக மாறும் என்றும் நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com