”பட்டியலினத்துக்கு கிரீமிலேயர்.. சொந்த சமூகத்திலேயே எதிர்ப்பு” - பணி இறுதி நாளில் பி.ஆர்.கவாய் !
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நாளையுடன் (நவம்பர் 23) ஓய்வுபெறவுள்ள நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) அவருக்கு பிரிவு உபசார விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் பேசிய கவாய், கடந்த 1985இல் சட்டத் துறை மாணவராக சேர்ந்தேன். பணிநிறைவின்போது நீதித் துறை மாணவராக விலகுகிறேன். தொடர்ந்து, முழு திருப்தியுடனும் மன நிறைவுடனும்தான் இந்தப் பணியைவிட்டு வெளியேறுவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
தொடர்ந்து, அரசியலமைப்பு நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது எப்போதும் பரிணாமம் அடையும். எனவே, நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர வேண்டும் என தீர்ப்பளித்ததற்காக, சொந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்பை சந்தித்தேன். ஆனால், பழங்குடியினரின் மகனை தனது மகனுடன் போட்டியிட வைக்க முடியுமா? ஒரு பழங்குடி மகனின் பள்ளிப்படிப்பு எனது மகனுக்கு சமமாக இருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக, பொருளாதார நீதிக்காக வாதிட்டார், ’சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, ஒருபடி முன்னேறிச் செல்லாவிட்டால் அல்லது சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைவதை நோக்கி முன்னேறாவிட்டால், ஜனநாயகக் கட்டடம் சீட்டுக்கட்டு வீடு போல விழுந்துவிடும்’ என 1949 நவம்பர் 25 அன்று அவர் தனது உரையில் அளித்த எச்சரிக்கை இது. அதன்படி, தான் அடிப்படை உரிமை மற்றும் சமநிலை நீதியை நிலைநாட்ட முடிந்தவரை முயற்சி செய்தேன் என்றும் தனது பிரிவு உபச்சார விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் கடந்த மே மாதம் 14ஆம் தேதி பொறுப்பேற்ற அவர், நாளையுடன் ஓய்வு பெறவுள்ளார். 2010ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய். இதையடுத்து, நவம்பர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்கவுள்ளார்.

