ஓய்வுபெறும் பி.ஆர் கவாய்.. அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.. யார் இந்த சூர்ய காந்த்?
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்ய காந்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் வரும் நவம்பர் மாதம் 23-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்க்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, நீதிபதி சூரியகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து கடிதம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்ய காந்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் இதனை முறைப்படி அறிவித்துள்ளார். அதன்படி, 53-வது உச்ச தலைமை நீதிபதியாக சூரிய காந்த் நவம்பர் மாதம் 24ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக்காலம் 15 மாதங்கள் நீடிக்கும்.
யார் இந்த சூர்ய் காந்த்?
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிப்ரவரி 10, 1962 அன்று பிறந்த நீதிபதி சூர்ய காந்த், 1981ஆம் ஆண்டு ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்றார். 1984ஆம் ஆண்டு ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, நீதிபதி காந்த் 1984ஆம் ஆண்டு ஹிசாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1985ஆம் ஆண்டு, நீதிபதி சூர்ய காந்த் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெறுவதற்காக சண்டிகருக்கு மாறினார். அவர் அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றார்.
இந்திய உச்ச நீதிமன்ற வலைத்தளத்தின்படி, ஜூலை 7, 2000 அன்று ஹரியானாவின் இளைய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட நீதிபதி என்ற பெருமையை சூர்ய காந்த் பெற்றார். மார்ச், 2001இல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 09, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்படும் வரை ஹரியானாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை வகித்தார். பிப்ரவரி 23, 2007 அன்று தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் ஆளும் குழுவின் உறுப்பினராக பிப்ரவரி 22, 2011 வரை தொடர்ந்து இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.
குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் 2011ஆம் ஆண்டு சட்டத்தில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் முதலிடம் பெற்று மற்றொரு சிறப்பைப் பெற்றார். அக்டோபர் 5, 2018 முதல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். காலனித்துவ கால தேசத் துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்த வரலாற்று சிறப்புமிக்க அமர்வில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்தார், அரசாங்க மறுஆய்வு வரை அதன்கீழ் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்,


